தேன்கனிக்கோட்டை அருகே ஊருக்குள் சுற்றித்திரியும் ஒற்றை யானையால் பீதி: காட்டுக்குள் விரட்ட கிராம மக்கள் கோரிக்கை

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே கிராம பகுதியில் சுற்றி திரியும் ஒற்றை யானையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஒற்றை யானையை அடர்ந்த காட்டு பகுதிக்கு விரட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே நொகனூர் காப்புகாட்டில் முகாமிட்டுள்ள கிரி என்ற ஒற்றை யானை கடந்த 2 வாரங்களாக தாவரக்கரை, ஒசட்டி, கண்டகானப்பள்ளி, மலசோனை, பாலதோட்டனப்பள்ளி ஆகிய கிராம பகுதிகளில் சுற்றி வருகிறது.

பகல் நேரங்களில் ராகி வயல்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்யும் யானையை பொதுமக்கள் பட்டாசு வெடித்து விரட்டினால் சாவகமாக கிராமங்களுக்குள் புகுந்து வனப்பகுதிக்குள் செல்கிறது. நேற்று முன்தினம் பாலதோட்டனப்பள்ளி கிராமம் அருகே கொல்லப்பள்ளி கிராமத்தில் புகுந்து பின், அங்கிருந்து வெளியேறியது. இந்நிலையில் நேற்று மீண்டும் தாவரக்கரை கிராமம் அருகே பயிர்களை தின்று நாசம் செய்து சாலையை கடந்து சென்றது. தகவலறிந்த தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் பட்டாசு வெடித்து நொகனூர் காட்டிற்குள் யானையை விரட்டினர். தினமும் கிராம பகுதிகளில் ஒற்றை யானை உலா வருவதால் விவசாய பணிகளில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ஒற்றை யானையை அடர்ந்த காட்டிற்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: