கொளப்பாக்கம் பகுதிகளில் குடியிருப்புகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணி தீவிரம்

குன்றத்தூர்: குன்றத்தூர் ஒன்றியம், கொளப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட எம்.ஆர்.கே.நகர், மேக்ஸ்வொர்த் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் அதிகளவில் சூழ்ந்திருந்தது. மேலும், செம்பரம்பாக்கம் மற்றும் போரூர் ஏரிகளில் இருந்து வரும் உபரிநீர், தந்தி கால்வாயில் அளவுக்கு அதிகமாக வருகிறது. இதனால் குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்து, அப்பகுதியே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இந்த மழைநீரை அகற்ற பொதுப்பணி துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.

அதன்படி, கொளப்பாக்கம் ஊராட்சியை ஒட்டிய சாலையை தோண்டினர். அப்போது, சுமார் 1 கிமீ தூரத்துக்கு, அதாவது அடையாறு வரை கால்வாய் இருப்பது தெரிந்தது. அந்த கால்வாயை தோண்டும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர், ‘பள்ளம் தோண்டினால் வீட்டை விட்டு வெளியே வர முடியாது’ என்று எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு அதிகாரிகள், ‘பல்வேறு குடியிருப்புகள் வெள்ளத்தில் சிக்கி உள்ளது. அவர்களை மீட்க வேண்டும்.

அரசுக்கு சொந்தமான கால்வாயைதானே தோண்டுகிறோம்’ என்று அதிகாரிகள் கூறினர். இதையடுத்து, கால்வாயை தோண்டி மழைநீரை வெளியேற்றும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர். இதையடுத்து கொளப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீர், அடையாறு ஆற்றில் சீராக சென்று வருகிறது.

Related Stories: