தொடர் மழையால் அடியோடு சாய்ந்தது; அறுவடை செய்ய தாமதத்தால் மீண்டும் முளைக்க தொடங்கிய ராகி: விவசாயிகள் அதிர்ச்சி

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை பகுதியில் தொடர் மழையால் ராகி கதிர் அடியோடு சாய்ந்து, வயலிலேயே முளைத்ததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும், விவசாயிகள் பரவலாக ராகி சாகுபடி செய்துள்ளனர். குறிப்பாக ஓசூர், தளி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி உள்ளிட்ட பகுதியில் ராகி சாகுபடி பிரதான இடத்தை பிடித்துள்ளது. அருகில் உள்ள கர்நாடக மாநிலத்தில் செயல்பட்டு வரும் பிஸ்கட் கம்பெனிகளிலிருந்து வந்து, ராகியை மொத்தமாக கொள்முதல் செய்ததால் சாகுபடி பரப்பு அதிகரித்தது. இதனால், குறுகிய கால ரகங்களை தேர்வு செய்து பயிரிட்டு நல்ல வருவாய் ஈட்டி வந்தனர். ஆனாலும், கதிர்விடும் சமயங்களில் மோப்பம் பிடித்து வரும் கர்நாடக மாநில யானைகளிடமிருந்து, ராகி பயிரை காபாற்றும் முயற்சியில் ஆண்டுக்கு 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழக்கும் அவலம் தொடர்ந்து வந்தது.

நடப்பு பருவத்தில் தேன்கனிக்கோட்டை பகுதியில், ராகி மகசூலுக்கு வந்த நிலையில், தீபாவளி பண்டிகை முதல் விட்டு விட்டு பெய்து வரும் மழையால் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது. கதிர் முற்றி காணப்பட்ட ராகி பயிர் தொடர் மழையால், வயலில் அடியோடு சாய்ந்தது. அதேநேரத்தில் வயல்களில் தண்ணீர் தேங்கியதால் நாளடைவில் முளைக்க தொடங்கியுள்ளது. அறுவடை செய்தாலும் ராகி நிலத்திலேயே உதிர்ந்து விடும் நிலையில் உள்ளது. தொடர் மழையால் அறுவடை செய்ய முடியாமலும், போதிய கூலி ஆட்கள் கிடைக்காமல், தொடர் மழையால் ராகி பயிர்கள் நிலத்திலேயே அழுகி விடும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஊடு பயிர்களான துவரை, அவரை, சோளம், கடுகு, கொள்ளு போன்ற பயிர்களும் தொடர் மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

ராகி பயிர்கள் அழுகியதால் கால்நடைகளுக்கு தீவனம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘நவம்பர் மாதம் முழுவதும் மழை பெய்ததால், அறுவடை தருவாயில் ராகி பயிர்கள் வயல்களில் சாய்ந்து விட்டன. தொடர்ந்து மழை பெய்வதால், சாய்ந்த பயிர்களையும் அறுவடை செய்ய முடியாத நிலை எற்பட்டு நிலத்திலேயே முளைத்து விட்டன. கூலி ஆட்கள் கிடைக்காததால், ஏக்கருக்கு ₹50 ஆயிரம் வரை செலவு செய்தாலும், ராகி பயிர்களை முழுமையாக மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ராகி பயிர்கள் வயல்களில் அழுகியதால் கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு உருவாகியுள்ளது. எனவே, தேன்கனிக்கோட்டை மற்றும் ஓசூர் தாலுகாவில், மழை வெள்ளத்தால் பாதித்த ராகி பயிருக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்,’ என்றனர்.

Related Stories:

More