திருப்பதி ஏழுமலையான் கோயில் சிறப்பு அதிகாரி `டாலர்’ சேஷாத்ரி மாரடைப்பால் மரணம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் சிறப்பு அதிகாரியான ‘டாலர்’ சேஷாத்ரி நேற்று அதிகாலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஏழுமலையான் கோயிலில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நேற்று மாலை கார்த்திகை தீபத்திருவிழாவும், கல்யாண உற்சவமும் நடைபெற இருந்தது. இதில் பங்கேற்க திருப்பதி ஏழுமலையான் கோயில் சிறப்பு அதிகாரி ‘டாலர்’ சேஷாத்ரி என்கிற பாலசேஷாத்ரி(74) கடந்த 27ம் தேதி விசாகப்பட்டினம் சென்றார்.  நேற்று அதிகாலை 4 மணியளவில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதைக்கண்ட தேவஸ்தான அதிகாரிகள், உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். அதற்குள் அவர் மரணமடைந்தார்.

எப்போதும் அதிக எடை கொண்ட டாலர் அணிந்து வந்ததால் அவரை ‘டாலர்’ சேஷாத்ரி என அழைக்கப்பட்டு வந்தார். அவரது விருப்பப்படியே ஏழுமலையான் பணியில் இருந்தபோதே மரணமடைந்தார். `டாலர்’ சேஷாத்ரி மறைவுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி, எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி, முன்னாள் தேவஸ்தான செயல்அலுவலர்கள், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

Related Stories:

More