தனியார் தொழிற்சாலையில் திருடிய 2 பேர் பிடிபட்டனர்: 6.5 லட்சம் 153 ரிமோட் சாவிகள் பறிமுதல்

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த உளுந்தை அருகே மப்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்டாலின் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் திருவள்ளூர் அடுத்த குன்னவலம் கிராமத்தைச் சேர்ந்த உமாகாந்த்(22) மற்றும் செந்தில்வேல்(40) என தெரியவந்தது. உமாகாந்த் தான் பணியாற்றும் தொழிற்சாலையிலிருந்து பொருட்களை சிறுக சிறுக திருடி வந்து தொடுகாடு பகுதியில் உள்ள செந்தில்வேல் காயலான் கடையில் கொடுத்து வந்தது தெரியவந்தது. மேலும் கடந்த 6.7.2021 அன்று உமாகாந்த் தொழிற்சாலையில் இருக்கும்போது செந்தில்வேல் மதில் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று பொருட்களைத் திருடி வந்து மதில் சுவர் வழியாக தூக்கி வெளியே வீசி விட்டு அதன்பிறகு திருடி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து திருடிய பொருட்களை 2 பேரும் சென்னை புதுப்பேட்டையில் உள்ள கனகராஜ் என்பவரிடம் தங்களுடைய காயலான் கடைக்கு பொருட்கள் என்றும் அதனை விற்பனை செய்து கொடுக்குமாறு கொடுத்துள்ளதாகவும் அதற்கான பணத்தை வாங்க சென்னைக்கு பிறந்ததாகவும் கூறினர். இதனைத்தொடர்ந்து போலீசார் உமாகாந்த் செந்தில்வேல் ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் புதுப்பேட்டையை சேர்ந்த கனகராஜிடமிருந்து 6 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் 153 ரிமோட் சாவிகளை பறிமுதல் செய்தனர்.

ஏற்கனவே தொடுகாடு கிராமத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் கடந்த 6.7.2021 அன்று 13 லட்சம் மதிப்புள்ள கார் ரிமோட் சாவிகள் மற்றும் உதிரிபாகங்கள் திருடுபோனதாக தனியார் தொழிற்சாலையின் மனிதவள மேலாளர் அழகர்சாமி மப்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதே தொழிற்சாலையில் உமாகாந்த் பணியாற்றி வருவதும் இந்த தொழிற்சாலையிலிருந்து தான் கார் ரிமோட் சாவிகள் மற்றும் உதிரி பாகங்கள் திருடிச் சென்றதும் தெரியவந்தது. 

Related Stories:

More