ரூ.2.50 லட்சத்திற்கு குழந்தையை விற்பனை செய்த வழக்கில் திடீர் திருப்பம்: புரோக்கராக செயல்பட்ட 2 பெண்கள் கைது

சென்னை: ஆண் குழந்தையை ரூ.2.50 லட்சத்திற்கு விற்பனை செய்த வழக்கில் திடீர் திருப்பமாக, குழந்தையின் தாய் தனது குழந்தையை விற்பனை செய்த பணத்தை தனது நண்பரிடம் கொடுத்துவிட்டு, யாரோ கொள்ளையடித்து சென்றதாக காவல் நிலையத்தில் புகார் அளித்து நாடகமாடியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இதுதொடர்பாக 2 பெண் புரோக்கர்களை போலீசார் கைது செய்தனர். சென்னை புழல் காவாங்கரை கே.எஸ். நகர் 6வது தெருவை சேர்ந்தவர் யாஸ்மின்(28). இவருக்கு மோகன் என்பவருடன் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஷர்மிளா(10) என்ற பெண் குழந்தை உள்ளது. யாஸ்மின், 2வது முறையாக 5 மாதம் கர்ப்பமாக இருந்த போது அவரது கணவர் மோகன், அவரை விட்டு சென்று விட்டார்.

இந்நிலையில் கணவன் விட்டு சென்றதால் பிறக்கவிருக்கும் குழந்தையை வளர்க்க வழியின்றி தவித்து வந்தார். கெல்லீசில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அடிக்கடி யாஸ்மின் சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்போது, பழக்கமான எண்ணூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த ஜெயகீதா, வயிற்றில் உள்ள குழந்தையை பிறந்த உடன் அந்த குழந்தையை அதிக பணத்திற்கு தான் விற்று தருவதாக உறுதியளித்துள்ளார். இதற்கிடையே கடந்த 24ம்தேதி தேதி யாஸ்மினுக்கு ஆண் குழந்தை பிறந்தது. பிறகு திட்டமிட்டப்படி குழந்தையை விற்பனை செய்ய நேற்று முன்தினம் புரசைவாக்கத்தில் உள்ள பிரபல கடை அருகே ஜெயதீபாவுடன் வந்துள்ளார். சொன்னப்படி ரூ.2.50 லட்சத்திற்கு இடைத்தரகர்களான தனம் மற்றும் ஜெயதீபா ஆகியோர் உதவியுடன் குழந்தையை விற்பனை செய்துள்ளார்.

பிறகு அன்று இரவு குழந்தை விற்பனை செய்த பணத்தை 2 பேர் பைக்கில் வந்து கொள்ளையடித்து சென்றதாக வேப்பேரி காவல் நிலையத்தில் யாஸ்மின் புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீசார் குழந்தையை விற்பனை செய்ய புரோக்கராக செயல்பட்ட ஜெயகீதா, தனம் லதா, ஆரோக்கிய மேரி ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் விற்பனை செய்யப்பட்ட குழந்தை மூலகொத்தளத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையை மீட்டனர். குழந்தையை வாங்கிய தம்பதியிடம் விசாரணை நடத்திய போது, ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த சிவக்குமாருக்கு திருமணம் நடந்த 13 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லாததால் ஒரே அலுவலகத்தில் வேலை செய்து வரும் ஆரோக்கியமேரி என்பவரின் ஆலோசனைப்படி குழந்தையை வாங்கியதாக தெரியவந்தது. குழந்தையை சிவக்குமார் மனைவி தேவி தாயார் வீட்டில் வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதற்கிடையே வழக்கில் திடீர் திருப்பமாக குழந்தையை விற்பனை செய்த ரூ.2.50 லட்சம் பணத்தை யாரோ கொள்ளையடித்து சென்றதாக யாஸ்மின் பொய் புகார் அளித்த தெரியவந்தது. யாஸ்மின் ஆட்டோவில் செல்லும் போது பணத்தை கொள்ளையடித்ததாக புகார் அளித்திருந்தார். சம்பந்தப்பட்ட ஆட்டோ டிரைவரை பிடித்து விசாரணை நடத்தியதில், தனக்கு மீட்டர் காசு ரூ.110 மட்டும் கொடுத்து சவாரியை முடித்து அனுப்பினர். மற்றப்படி யாரும் ஆட்டோவை வழிமறித்து யாரும் பணத்தை கொள்ளையடிக்கவில்லை என்று ஆட்டோ டிரைவர் போலீசாரிடம் தெரிவித்தார். உடனே போலீசார் புகார் அளித்த யாஸ்மினிடம் பணம் கொள்ளை குறித்து விசாரணை நடத்தினர்.

அப்போது ஜெகன் மற்றும் சந்தியா என்ற தம்பதி காவல் நிலையத்திற்கு தானாக ஆஜராகி பணம் கொள்ளை குறித்து விளக்கம் அளித்தனர். அதில், நாங்கள் சமூக வலைத்தளங்களில் குழந்தை விற்பனை செய்த பணத்தை யாரோ கொள்ளையடித்து சென்றதாக யாஸ்மின் புகார் அளித்ததாக தெரியவந்தது. அதில் உண்மையில்லை என்றும், யாஸ்மின் தனது குழந்தையை விற்பனை செய்த பணம் ரூ.2.50 லட்சத்தை எனக்கு போன் செய்து ஜீவா பார்க் அருகே வரவழைத்து கொடுத்ததாகவும், பிறகு அந்த பணத்தை வாங்கி கொள்வதாக கூறிவிட்டு சென்று விட்டார். பிறகு அடுத்த நாள் மாதவரம் அருகே யாஸ்மின் என்னிடம் கொடுத்து வைத்திருந்த பணத்தை திரும்ப வாங்கி கொண்டார். ஆனால் அவர் பணத்தை கொள்ளையடித்ததாக புகார் அளித்துள்ளார். இதனால் தேவையில்லாமல் நாங்கள் சிக்கிவிடுவோம் என்று அச்சத்தில் நாங்களே ஆஜராகி விளக்கம் அளிக்கலாம் என்று காவல்நிலையத்தில் ஆஜரானதாக தெரிவித்தனர்.

அதைதொடர்ந்து போலீசார் மீட்கப்பட்ட குழந்தை மற்றும் தாய் யாஸ்மின்  ஆகியோரை அமைந்தகரையில் உள்ள காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர்.  புகார் தொடர்பாக குழந்தையை விலைக்கு வாங்கிய தம்பதி சிவக்குமார், தேவி மற்றும் ஆட்டோ டிரைவர் செய்யது தஸ்தகீர், குழந்தையை விற்பனை செய்ய உடந்தையாக இருந்து ஜெகனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இந்த வழக்கில் இளம் பெண்ணை ஏமாற்றி ரூ.2.50 லட்சத்திற்கு குழந்தையை விற்பனை செய்த புரோக்கராக செயல்பட்ட தனம் மற்றும் ஜெயகீதாவை போலீசார் கைது செய்தனர்.

Related Stories:

More