மாஜி அமைச்சரை மாட்டி விட்டதுபோல் என்னை பொய் வழக்கில் சிக்க வைக்க சதி: மகாராஷ்டிரா அமைச்சர் பகீர் குற்றச்சாட்டு

மும்பை: பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் கைது செய்யப்பட்ட வழக்கு குறித்து பேசி வருவதால் தன்னை பொய் வழக்கில் சிக்கவைக்க சதி நடப்பதாக மகாராஷ்டிர மாநில அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான நவாப் மாலிக் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே சொகுசுக் கப்பலில் நடைபெற்ற பார்ட்டியில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் 23 வயது மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட பிரபலங்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் நடைபெற்ற இந்த விவகாரத்தில் கைதாகிய ஆர்யன் கான் பின்னர் பிணையில் வெளிவந்தார்.

இந்த வழக்கில் ஆர்யன் கானை கைது செய்த போதைப் பொருள் தடுப்பு முகமையின் மும்பை மண்டல இணை இயக்குனராக இருந்த சமீர் வான்கடே குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அம்மாநில அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான நவாப் மாலிக் கூறிவந்தார். இந்நிலையில் அவர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் என்னையும், எனது குடும்ப உறுப்பினர்களையும் தொடர்ந்து வந்து உளவு பார்த்து வருகின்றனர். என்னை பின் தொடர்ந்து வந்து இருவர் புகைப்படங்கள் எடுத்தனர்.

லஞ்சப் புகார் வழக்கில் சிக்கிய முன்னாள் உள்துறை அமைச்சராக இருந்த அனில் தேஷ்முக் போல என்னையும் பொய் வழக்கில் சிக்க வைக்க சதி நடக்கிறது. இதற்கெல்லாம் நான் பயந்துவிடவில்லை. வரும் இரண்டொரு நாட்களில் முறைப்படி மும்பை போலீஸ் கமிஷனரிடம் புகார் தெரிவிக்க உள்ேளன். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் விரிவாக புகார் கடிதம் அனுப்ப உள்ளேன்’ என்றார்.

Related Stories: