பெண் பத்திரிகையாளர் பலாத்கார வழக்கில் 3 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் சிறையாக மாற்றம்: மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மும்பை:  மும்பையில் உள்ள சக்தி மில் கடந்த 2013ம் ஆண்டில் செயல்படாமல் பாழடைந்து கிடந்தது. அங்குள்ள வளாகத்தில் அந்த ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி, பெண் புகைப்பட கலைஞர் ஒருவர், சக ஆண் ஊழியருடன் செய்தி சேகரிக்க சென்றிருந்தார். அப்போது அங்கிருந்த 5 பேர் கும்பல், ஆண் ஊழியரை தாக்கி கட்டிப்போட்டு விட்டு, பெண் புகைப்பட கலைஞரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது. இது தொடர்பாக, 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.  

 இந்த வழக்கை விசாரித்த செஷன்ஸ் நீதிமன்றம் கடந்த 2014ம் ஆண்டு மார்ச் மாதம், சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்ட சிறுவனை தவிர 4 பேரையும் குற்றவாளிகளாக அறிவித்தது.

இதில் தொடர்புடைய ஜாதவ், பெங்காலி, மற்றும் அன்சாரி ஆகிய 3 பேருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இவர்கள் 3 பேரும் ஏற்கனவே அதே இடத்தில் 19 வயது பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்தனர். மேற்கண்ட 2 வழக்குகளிலும் சேர்த்து மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 3 பேர் இரண்டு வழக்குகளிலும் தொடர்புடைய பொதுவான குற்றவாளிகள். இந்நிலையில், தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து விஜய் ஜாதவ் உள்ளிட்ட 3 குற்றவாளிகளும் மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகினர்.

இந்த வழக்கை விசாரித்த  மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நேற்று அளித்த தீர்ப்பில், ‘பலாத்கார குற்றவாளி உடல் அளவில் மட்டுமின்றி மனதளவிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். பலாத்காரம் என்பது மனித உரிமை மீறல் என்பதில் ஐயமில்லை. செய்த குற்றத்துக்காக வருந்துவதாக மரணம் இருக்காது. . அவர்கள் தாங்கள் செய்த குற்றத்துக்காக வருந்தவும், அதை உணரவும் வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனையை அனுபவிப்பதே சரியான முடிவாக இருக்கும். எனவே, 3 பேரையும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்படுகிறது,’ என்று அறிவித்தனர்.

Related Stories: