தனிநபர் தகவலை உடனடியாக உறுதிப்படுத்த ஸ்மார்ட் போனுடனும் ஆதார் எண் இணைப்பு: உதய் அதிரடி திட்டம்

மும்பை: நாடு முழுவதும் அனைவருக்கும் அடையாள எண்ணான ஆதார் எண்ணை உதய் (யுஐடிஏஐ) நிறுவனம் வழங்கி பராமரித்து வருகிறது. இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சவுரவ் கார்க் மும்பையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது: ஸ்மார்ட் போன்கள், ஆதார் ஆணையத்தோடு இணைந்து செயல்படுவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தற்போது நாட்டில் உள்ள 120 கோடி மொபைல் இணைப்புகளில் 80 கோடி ஸ்மார்ட்போன்களாக உள்ளன. உயர் ரக போன்களில் மட்டுமல்லாது, நடுத்தர ஸ்மார்ட் போன்களிலும் கூட, கை ரேகை மற்றும் கண் கருவிழி படலத்தை கொண்டு போன்களை ஓபன் செய்யும் தொழில்நுட்பம் அறிமுகமாகி உள்ளது.

இவ்விரு தகவல்களும் ஆதார் அடையாள அட்டை அமைப்பிடம் ஏற்கனவே உள்ளவை. அதாவது, ஆதார் அட்டை எடுக்கும்போது கண் கருவிழி படலம், கைரேகை போன்றவற்றை அனைத்து மக்களும் கொடுத்துள்ளார்கள். எனவே, ஸ்மார்ட் போன்களில் ஆதார் சர்வரை இணைத்து, அரசின் பல்வேறு சேவைகளை கைரேகை மற்றும் கண் விழித்திரையை கொண்டு உடனுக்குடன் உறுதி செய்வதுதான் அடுத்த கட்டதிட்டம். தற்போது ஆதார் தகவலை உறுதி செய்ய கைரேகை, கருவிழி மற்றும் ஓடிபி பயன்படுத்தப்படுகிறது. இவை அனைத்து ஸ்மார்ட்போன்கள் மூலம் எளிதில் செய்து விடலாம். . தகவல்கள் எப்போதும் போல் பாதுகாப்பாகவே இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

* நாடு முழுவதும் 130 கோடி ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 99.5 சதவீதம் பேர் ஆதார் அட்டை பெற்றுள்ளனர். மீதமுள்ள 0.5 சதவீதம் பேரையும் ஆதாருக்குள் கொண்டு வரும் பணிகள் நடக்கின்றன.

* 70 கோடி வங்கி கணக்குகள், அதாவது மொத்த வங்கி கணக்குகளில் 50 சதவீதம் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன.

Related Stories: