பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக புகார் தெரிவிக்க பள்ளிகளில் மாணவியர் பாதுகாப்பு குழு அமைப்பு-மஞ்சூர் போலீசார் நடவடிக்கை

மஞ்சூர் :  பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக புகார் தெரிவிக்கும் வகையில் காவல்துறை சார்பில் மஞ்சூர் பள்ளிகளில் குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கோவை தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலால் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து பாலியல் குற்றங்களை அடியோடு தடுக்கும் வகையில் அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இதன் ஒருபகுதியாக அனைத்து பள்ளிகளிலும் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பள்ளிகளில் புகார்பெட்டி மற்றும் குழுக்களை ஏற்படுத்தவும் தமிழக டி.ஜி.பி.சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதன்படி மஞ்சூர் காவல் நிலையத்தின் சார்பில் தமிழக கேரளா எல்லையில் உள்ள கிண்ணக்கொரை அரசு மேல்நிலைப்பள்ளியில் பாலியல் தொடர்பாக விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

மஞ்சூர் எஸ்.ஐ. ராஜ்குமார் தலைமை தாங்கி பேசினார். தொடர்ந்து தலைமையாசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகி, பள்ளி ஊழியர், பெற்றோர் மற்றும் போலீசார் உள்பட 6 பேர் அடங்கிய மாணவியர் பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டது. பாலியல் உள்ளிட்ட அனைத்துவித துன்புறுத்தல்கள் குறித்து புகார் இருந்தால் மாணவிகள் சம்மந்தப்பட்ட பாதுகாப்பு குழுவிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

இதில் உதவி தலைமையாசிரியை உமாலட்சுமி, ஆசிரியர் செந்தில்குமார், மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டார்கள். இதேபோல் மஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி மற்றும் சுற்றுபுற பகுதிகளில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, தனியார் பள்ளிகளிலும் காவல்துறை சார்பில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு மாணவியர் பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்பட்டது.

Related Stories: