கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் 100 ஏக்கர் சம்பா, பயிர்கள் சேதம்

* கிராமத்தை மழை நீர் சூழ்ந்தது

* பாதுகாப்பான இடத்தில் மக்கள் தங்க வைப்பு

கொள்ளிடம் : கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து அதிகமாக செல்வதால் 30 ஏக்கர் சம்பா, 70 ஏக்கர் தோட்டப்பயிர்கள் சேதமடைந்தது. கிராமத்தையும் தண்ணீர் சூழ்ந்ததால் பாதுகாப்பான இடத்தில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்பட்டு அதிகமாக தண்ணீர் சென்று கொண்டிருப்பதால் கொள்ளிடம் ஆற்றின் நடுப்பகுதியில் உள்ள திட்டு பகுதியான நாதல் படுகை கிராமத்தை தண்ணீர் சூழ்ந்தது. இந்நிலையில், சீர்காழி ஆர்டிஓ நாராயணன் உத்தரவின் ேபரில் சீர்காழி தாசில்தார் சண்முகம் தலைமையிலான அதிகாரிகள், அங்குள்ளவர்களை பாதுகாப்பாக மீட்டு படகுகள் மூலம் அழைத்து வந்து அனுமந்தபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தங்க வைத்துள்ளனர்.

இந்நிலையில் தண்ணீர் தொடர்ந்து கிராமத்தை சூழ்ந்திருப்பதால் நடுவில் சிக்கிக் கொண்ட ஒரு குடும்பத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மூதாட்டி, பெண் மற்றும் குழந்தையை படகின் மூலம் நேற்று அழைத்து வந்து முகாமில் தங்க வைத்தனர். ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருப்பதால் நாதல்படுகை கிராமத்தில் மட்டும் 30 ஏக்கர் சம்பா நெற்பயிர் தண்ணீரில் மூழ்கி அழுகியது. அப்பகுதியில் தோட்டப் பயிர்களான வாழை, மல்லி, முல்லை, காக்கட்டான், மக்காச்சோளம், மஞ்சள், கத்திரி, வெண்டை, மிளகாய், செடி முருங்கை உள்ளிட்ட 70 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட தோட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமானது.

தண்ணீர் இறைக்க பயன்படுத்திய 40 ஆயில் என்ஜின்கள் மற்றும் 20 மின் மோட்டார்கள் தண்ணீரில் மூழ்கின.இதுகுறித்து நாதல்படுகை கிராம விவசாயிகள் கூறுகையில், நாதல்படுகை கிராமத்தில் ஆற்றங்கரை சாலையை ஒட்டி இருந்த வடிகால் வாய்க்கால் தூர்ந்து போய் உள்ளது.இதனால் தண்ணீர் எளிதில் வெளியேற முடியாமல் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியது.

இதனால் கிராம மக்கள் கிராமத்திற்குள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வடிகால் வசதி ஏற்படுத்தி தரும் வகையில் சாலையின் குறுக்கே புதியதாக மதகு அமைத்து தண்ணீர் எளிதில் வெளியேற வழிவகை செய்ய வேண்டும். நாதல்படுகை கிராமத்திற்கு செல்லும் சாலை உடைப்பு ஏற்படாமல் இருக்க 500 மீட்டர் தூரத்திற்கு இருபுறங்களிலும் கான்கிரீட் தடுப்புச் சுவர் அமைத்து தரவேண்டும்.

தற்போது தண்ணீரால் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர், சேதமடைந்த குடிசைவீடுகள், சேதமடைந்த தோட்டப்பயிர்கள் ஆகியவைகளை கணக்கீடு செய்து போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.

Related Stories: