ரோந்து பணிக்கு செல்லும்போது துப்பாக்கியுடன் செல்ல போலீசாருக்கு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தல்

திருச்சி: ரோந்து பணிக்கு செல்லும்போது துப்பாக்கியுடன் செல்ல போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளோம்  என்று தமிழக டிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளார். திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளராக பூமிநாதன் பணிப்புரிந்தார். இவர் கடந்த 21-ம் தேதி சில காவலர்களுடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக ஆடுகளுடன் வந்த இரு சக்கர வாகனங்களை நிறுத்தினார். ஆனால் அவர்கள் நிற்காமல் வேகமாக சென்றனர். அதனைத்தொடர்ந்து ஆடு திருடர்களுடன் ஏற்பட்ட மோதலில் எஸ்எஸ்ஐ பூமிநாதன் வெட்டிக்கொள்ளப்பட்டார்.

இந்தநிலையில் இன்று சென்னையில் இருந்து ரயில் மூலம் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, மறைந்த எஸ்எஸ்ஐ பூமிநாதன் இல்லத்திற்கு சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் காவல்துறை அதிகாரிகளும் எஸ்எஸ்ஐ பூமிநாதன் படத்திற்கு மலர்வளையம் வைத்தனர்.

24 மணிநேரத்தில் ஆடு திருடர்களை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு சைலேந்திர பாபு பாராட்டுகளை தெரிவித்தார். அதனையடுத்து தமிழக டிஜிபி சைலேந்திர பாபு நவல்பட்டு காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் பேட்டி அளித்த அவர், ரோந்து பணிக்கு செல்லும்போது துப்பாக்கியுடன் செல்ல போலீசாருக்கு அறிவுறுத்தி உள்ளதாக கூறினார். மேலும் தற்காப்புக்காக ஆயுதத்தை பயன்படுத்தலாம் என போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

Related Stories: