விடிய விடிய கனமழை ஆழியார் - வால்பாறை ரோட்டில் மண் அரிப்பால் பள்ளம்-3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

ஆனைமலை : மேற்கு தொடர்ச்சி மலைகளில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய பெய்த மழையால்ஆழியார் வால்பாறை சாலையில் மண் அரித்து திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதனால் நேற்று காலை 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு விடிய விடிய பெய்த கனமழை காரணமாக ஆழியார் சோதனை சாவடி அருகே சாலையில் மழை வெள்ளம் காட்டாறாக ஓடியதால் மண் அரிப்பு ஏற்பட்டது. இதில் சோதனைச்சாவடி அருகே உள்ள வால்பாறை ரோட்டில் காலை 8 மணி அளவில் 5 அடி அளவிற்கு தார் சாலையில் பள்ளம் ஏற்பட்டது.

இதையடுத்து வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் சாலையின் குறுக்கே தடுப்பு வேலி அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் பாதுகாப்பு கருதி சாலையை சீரமைக்கும் வரை ஆழியார் வால்பாறை சாலையில் பேருந்து, கார், இரு சக்கர வாகனம் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.இதையடுத்து வனத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். 3 மணி நேரத்தில் தார்சாலை சீரமைக்கப்பட்டு காலை 11 மணி அளவில் மீண்டும் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

தொடர் மழையால் மலைப்பாதைகள் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்று வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.பொள்ளாச்சி: பொள்ளாச்சி, நெகமம், ஆனைமலை, கோட்டூர், ஆழியார், சேத்துமடை, சூலக்கல், வேட்டைக்காரன்புதூர், கோபாலபுரம், அம்பாராம்பாளையம் உள்ளிட்ட பல இடங்களில் தொடர்ந்து பெய்த மழையால் பல இடங்களில் ரோட்டோரம் இருந்த மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தது.

நேற்றைய நிலவரப்படி பரம்பிக்குளம் 49(மில்லிமீட்டரில்), ஆழியார் 66, சர்க்கார்பதி 62, வேட்டைக்காரன்புதூர் 30, தூணக்கடவு 24, மணக்கடவு 38, பெருவாரிபள்ளம் 47, அப்பர் ஆழியார் 39, பொள்ளாச்சி 93, நெகமம் 63 என்ற அளவில் மழை பதிவாகியுள்ளது.

Related Stories: