உண்மைகள் வெளியே வந்துள்ளதால் ரபேல் குறித்து ஜேபிசி விசாரணை தேவை: காங். செய்தி தொடர்பாளர் பேட்டி

ஐதராபாத்: ரபேல் தொடர்பான உண்மைகள் வெளியே வந்துள்ளதால் ஜேபிசி விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கெரா கூறியுள்ளார். ரபேல் போர் விமானங்களை ஆளும் பாஜக அரசு விதிமுறைகளை  மீறியுள்ளதாகவும், அதில் ஊழல் நடந்துள்ளதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட  எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் ஐதராபாத் வந்த காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பவன் கெரா தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘ரபேல் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் சில தனிப்பட்ட மனுக்களை ரத்து செய்துள்ளது.

அதனால் ரபேல் போர் விமான முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் சில இடைத்தரகர்களின் பங்கு குறித்த சில ஆவணங்களை சிபிஐ தனது வசம் வைத்திருந்தது அம்பலமாகி உள்ளது. மேலும் இந்த ஆவணங்களை அமலாக்கத்துறை கைப்பற்றியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு மார்ச் 26ம் தேதி குறிப்பிட்ட இடைத்தரகர்களிடமிருந்து சில ஆவணங்களை அமலாக்கத்துறை மீட்டுள்ளது. இவையனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்குகள் ரத்து செய்யப்பட்ட பின்னர் நடந்துள்ளன.

எனவே தற்போது வெளியாகி உள்ள உண்மைகள் குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும். ரபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி உட்பட பல முக்கிய நபர்களின் தொடர்பு உள்ளது. அதனால் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் (ஜேபிசி) விசாரணையை காங்கிரஸ் கட்சி கோருகிறது’ என்று கூறினார்.

Related Stories: