மே 15ம் தேதி போப் அறிவிக்கிறார்; ‘மறைசாட்சி தேவசகாயத்திற்கு’ புனிதர் பட்டம்: பிஷப் நசரேன் சூசை பேட்டி

நாகர்கோவில்: கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை நாகர்கோவிலில் ஆயர் இல்லத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விதமாக இன்னும் ஒரு புனிதர் கிடைத்துள்ளார். அவர் மறைசாட்சி தேவசகாயம். கடந்த செவ்வாய் அன்று அவர் புனிதராக அறிவிக்கப்பட்டார். நமக்கு இது தொடர்பான கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. 2022ம் ஆண்டு மே மாதம் 15ம் தேதி அவருக்கு புனிதர் பட்டம் திருத்தந்தை பிரான்சிஸ் வாயிலாக ரோம் மாநகரில் வத்திகான் புனித பேதுரு சதுக்கத்தில் வழங்கப்பட இருக்கிறது.

அதன் பிறகு ‘மறைசாட்சி புனிதர் தேவசகாயம்’ என அவர் அழைக்கப்படுவார். இந்திய மண்ணில் பிறந்து இந்திய மண்ணிலேயே மறைசாட்சியாக அறிவிக்கப்பட்ட முதல் புனிதர், இந்திய திரு அவையின் முதல் பொதுநிலையினரான புனிதர், இல்லறத்தார், தமிழகத்தின் முதல் புனிதர் தேவசகாயம் ஆவார். மக்கள் அவரை ஏற்கனவே புனிதராக ஏற்றுக்கொண்டு கொண்டாடி வருகின்றனர். இந்தியாவில் புனிதராக அறிவிக்கப்பட்ட அனைவருமே ஒரு குருவாக, அருட் சகோதரியாக, துறவியாக வாழ்ந்துள்ளார்கள்.

இதுவரை அறிவிக்கப்பட்ட 6 பேரும் அவ்வாறான நிலையில் இருந்துதான் புனிதராக தேர்வு செய்யப்பட்டார்கள். மறைசாட்சி தேவ சகாயத்தின் தனிச்சிறப்பு என்றவென்றால் அவர் ஆயராக, குருவாக இருந்திருக்கவில்லை. ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்து அவர் அரசவையில் பணியாற்றி அவரது இறை நம்பிக்கைக்காக சிறை சென்று, வதைக்கப்பட்டு குண்டுகளுக்கு இரையாகி கொலை செய்யப்பட்டார். அவர் புனிதராக அறிவிக்கப்பட்டது தமிழ்நாட்டில் பிறந்தவர்கள், குமரி மண்ணில் பிறந்தவர் மேலான மகிழ்ச்சி தரும் விஷயம் ஆகும்.

ஒரு சமத்துவமான சமுதாயம் உருவாக வேண்டும் என்ற எண்ணம் தேவசகாயத்தின் எண்ணமாக இருந்தது. அவர் வாழ்கின்ற காலகட்டத்தில் இருந்த சாதிய படிநிலையை தெளிவாக எதிர்த்திருக்கிறார். எல்லா மக்களுடனும் பழகியவர். அனைவரும் கடவுளின் மக்கள் என்பதை அவர் உறுதியாக நம்பியிருக்கிறார்.  மக்களால் புனிதராக கொண்டாடப்படுபவருக்கு ஒரு சில நூற்றாண்டுகள் கழிந்துவிட்ட பிறகு வேண்டுகோள் விடுக்கப்பட்டு ,அவர் புனிதராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கான பணிகளில் தொடக்க நிலையில் இருந்து வழி நடத்தியவர் அருட்பணியாளர் ஜாண் குழந்தை.

மேலும் ஆயர்கள் ஆரோக்கியசாமி, ஆயர் லியோன் தர்மராஜ் இதற்காக பாடுபட்டனர். ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ்-ன் 10 ஆண்டு காலத்தில் புனிதர் பட்ட முனைப்புகள், முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு துரிதமாக பணிகள் நடைபெற்றன. வரும் மே மாதம் 15ம் தேதி ரோம் நகரில் நடைபெறுகின்ற நிகழ்வில் இந்தியாவில் இருந்து பல தலைவர்கள் கலந்துகொள்வார்கள். ஏற்கனவே இதுபோன்ற நிகழ்வுகளில் அமைச்சர் மம்தா பானர்ஜி, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருக்கின்றனர். மே 15ம் தேதி இவருடன் சேர்ந்து 7 பேர் புனிதர்களாக அறிவிக்கப்பட உள்ளனர்.

எனவே பல நாடுகளில் இருந்தும் அன்று தலைவர்கள் வருகை தருவர். அதற்கு முந்தைய நாளில் ரோமில் உள்ள புனித பேதுரு பேராலயத்தில் வரவேற்பும், அடுத்த நாள் புனித பவுலடியார் ஆலயத்தில் வைத்து நன்றி திருப்பலியும் நடைபெறும். இங்கிருந்து செல்வோருக்கு மூன்று வகையான பயண திட்டங்களும் உள்ளன. ரோம், இத்தாலி மட்டும் சென்று வருவது, மற்றொன்று  ஐரோப்பாவும் சென்றுவிட்டு வருவது, இந்த இடங்களுடன் சேர்த்து இயேசு வாழ்ந்த ஜெருசலேம், பெத்லகேம் உள்ளிட்ட இடங்களுக்கும் சென்று வருவது என்பது உள்ளிட்ட பயண திட்டங்களும் வகுக்கப்பட்டு வருகின்றன.

மே 15ம் தேதி நிகழ்வுகள் இங்குள்ள ஆலயங்களில், பொது இடங்களில் நேரலையில் தொலைக்காட்சி வாயிலாக ஒளிபரப்பாகும். அதன் பிறகு மறை மாவட்டங்கள் சார்பில் குறிப்பிட்ட நாளில் மிகப்பெரிய நன்றி வழிபாடு நிகழ்வு நடத்தப்படும். இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். மறைசாட்சி தேவசகாயத்திற்கு மறைமாவட்டத்தின் பிரதானமான ஆலயமாக ஆரல்வாய்மொழி காற்றாடிமலை ஆலயம் விளங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மறை மாவட்ட முதன்மை அருட்பணியாளர் கிலோரியஸ், மறை மாவட்ட முதன்மை செயலர் இம்மானுவேல் ராஜ், துணை வேண்டுகையாளர் அருட் பணியாளர் ஜாண் குழந்தை, மறை மாவட்ட நிதி நிர்வாகி அலோசியஸ் மரிய பென்சிகர் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: