கேரள சுண்டல் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் பாறைகள் சரிவு; சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

போடி: கேரளாவில் உள்ள சுண்டல் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் பாறைகள் சரிந்துள்ளதால், வாகன ஓட்டிகள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இதை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். போடி அருகே உள்ள போடி மெட்டு பகுதி தமிழகத்தையும், கேரளாவையும் இணைக்கும் பகுதியாக உள்ளது. மெட்டுப்பகுதியிலிருந்து 11 கி.மீ தூரத்தில் தாண்டி பியல்ராம், சுண்டல், தோண்டிமலை, கோரம்பாறை, தலக்குளம், பூப்பாறை உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இப்பகுதியிலிருந்து நெடுங்கண்டம், மூணாறு ஆகிய ஊர்களுக்கு செல்லலாம். இந்நிலையில், இப்பகுதியில் செல்லும் கொச்சின் - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 5 ஆண்டுகளாக புதிய பாலங்கள், மெகா தடுப்பு சுவர்கள் அமைத்து சாலை விரிவாக்கம் நடந்தது. இப்பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

போடி மெட்டு பகுதியிலிருந்து பூப்பாறை வரை உள்ள மதிகெட்டான் சோலை பகுதியில் சாலை விரிவாக்கத்திற்காக மலை மற்றும் உயரமான மண்மேடுகளை குடைந்துள்ளனர். இந்நிலையில், கேரளாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், தேசிய நெடுஞ்சாலையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் பாறை சரிவுகளும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. நேற்று முன்தினம் சுண்டல் பகுதியில் 2வது முறையாக சாலையோரம் உள்ள உயரமான மலையிலிருந்து பாறைகள் சரிந்து சாலையில் கிடக்கின்றன. மேலும், இப்பகுதியில் உள்ள 80 ஆண்டு பழமையான மரம் எப்போது விழுமோ என்ற அச்சத்தில் வாகன ஓட்டிகள் உள்ளனர். எனவே, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் விரைவாக பாறைகளை அகற்றி போக்குவரத்து இடையூறின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: