காவிரி-குண்டாறு இணைப்பு விவகாரம் தமிழகம், புதுவை, கேரளா 6 வாரத்தில் பதிலளிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு எதிராக கர்நாடகா தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக தமிழகம், புதுவை மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் அடுத்த ஆறு வாரத்தில் பதிலளிக்க நேற்று உத்தரவிட்டுள்ளது. காவிரி குண்டாறு  இணைப்பு திட்டமானது கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது. ஆனால் இதற்கு ஆரம்பத்தில் இருந்தே கர்நாடகா அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் கர்நாடகா அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘காவிரி விவகார தீர்ப்பின் படி ஒதுக்கப்பட்ட தண்ணீரின் அளவை விட கூடுதலாக மாநிலங்கள் எடுத்துக் கொள்ள உரிமை கிடையாது.எனவே காவிரி- வைகை-குண்டாறு திட்டத்தை நிறைவேற்ற அனுமதி அளிக்கக்கூடாது.

அது மட்டுமல்லாமல் காவிரியின் குறுக்கே எந்த நீர் திட்டங்களையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தவும் கூடாது. இதில் பங்கீடு செய்யப்பட்ட மொத்த நீரான 483 டி.எம்.சி.க்கு மேல் இருமாநில எல்லையான பில்லிகுண்டுலுவுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள நீர் கர்நாடகத்துக்கு உரிமையானது என ஏற்கனவே தீர்ப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே கர்நாடகத்துக்கான நீரை மடை மாற்றி சேகரிக்கும் வகையில் அமையவுள்ள காவிரி- வைகை- குண்டாறு திட்டத்தை நிறைவேற்ற தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ரவிக்குமார் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உமாபதி, ‘இந்த விவகாரத்தில் எங்களது பதிலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என தெரிவித்தார். அதேபோன்று கேரளா மற்றும் புதுவை’ அரசு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து தரப்பு கோரிக்கைகளையும் ஏற்பதாக தெரிவித்த நீதிபதி, ‘காவிரி-குண்டாறு இணைப்பு திட்ட விவகாரத்தில் கர்நாடகா அரசு தாக்கல் செய்துள்ள மனுவுக்கு அடுத்த ஆறு வாரத்தில் தமிழகம், கேரளா, புதுவை ஆகிய மாநிலங்கள் பதிலளிக்க வேண்டும்’. இதையடுத்து அதுதொடர்பான பதில் கூடுதல் மனுவை அடுத்த மூன்று வாரங்களுக்குள் கர்நாடகா அரசு தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறி, வழக்கை ஒன்பது வாரத்துக்கு ஒத்திவைத்தார்.

Related Stories: