ஆர்.கே.பேட்டை பகுதிகளில் மழைநீரில் மூழ்கிய 200 ஏக்கர் நெற்பயிர்கள்

பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பி காணப்படுகின்றது. பள்ளிப்பட்டு அருகே ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் நீர் தேக்கத்தில் இருந்து தொடர்ச்சியாக உபரிநீர் திறந்துவிடப்பட்டு கொசஸ்தலை ஆற்றின் வெளியேற்றப்படுவதாலும், மலைகளில் இருந்து வெள்ள நீர் ஆற்றில் கலப்பதாலும் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் நீர் நிலைகள் முழுமையாக நிரம்பி உபரி நீர் கால்வாய்களில் பெருக்கெடுத்து செல்வதால் விவசாய நிலங்களை மூழ்கடித்துவிட்டது.ஆர்.கே.பேட்டை அருகே ராஜாநகரம், அய்யனேரி, அம்மனேரி, காண்டாபுரம், வெடியங்காடு, 

கோபாலபுரம் மற்றும்  நாகபூண்டி உட்பட 10க்கும் மேற்பட்ட பகுதிகளில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிர்கள் முற்றிலும் மழை நீரில் மூழ்கிவிட்டதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். குறிப்பாக பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் அடங்கிய அத்திமாஞ்சேரிப்பேட்டை, கோணசமுத்திரம், ராமாபுரம், காக்களூர், ஜெங்காளப்பள்ளி, பேட்டை கண்டிகை, சாமந்தவாடா, வெளிகரம் மற்றும் திருமலைராஜிபேட்டை ஆகிய பகுதிகளில் நெல், வாழை மற்றும் கரும்பு பயிர்கள் நீரில் மூழ்கிவிட்டது. மேலும் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் வெள்ளம் சூழ்ந்துவிட்டதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டு விவசாயிகள் தவிக்கின்றனர். எனவே, தமிழக அரசு நிவாரண உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: