திருப்பதியில் தலவிருட்சமாக சம்பங்கி மரம் தேர்வு: தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் தல விருட்சமாக சம்பங்கி மரத்தை தேர்வு செய்து தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி தேவஸ்தானம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறியிருப்பதாவது: ஏழுமலையானுக்கு நடத்தப்படும் அனைத்து விதமான பூஜைகளில் பயன்படுத்தப்படும்  மலர்களின் அடிப்படையில் சம்பங்கி மரம் ஏழுமலையான் கோயில் தலவிருட்சமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேவஸ்தான செயல் அதிகாரி ஜவகர் உத்தரவின்படி புராணங்களில் கூறப்பட்டுள்ள பல்வேறு வகையான மலர் செடிகளைக் கொண்ட பூந்தோட்டம் திருமலையில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அவற்றில் ஏழுமலையானுக்கு தினமும் நடத்தப்படும் பூஜைகளில் சம்பங்கி குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்று வருகிறது.

பவிஷ்யோத்ர புராணம் 13வது பாகம் 33 மற்றும் 34வது சுலோகங்களில் அப்போதைய அரசர் தொண்டமான் சக்கரவர்த்தியிடம் தனக்கான கோயிலை கட்டும்போது கட்டுமானத்திற்காக தேர்வு செய்யப்பட்ட பகுதியில் இருக்கும் சம்பங்கி தோட்டத்தை அகற்ற வேண்டாம் என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழுமலையான் கோயலில் உள்ள ஒருபகுதி தற்போதும் சம்பங்கி பிரகாரம் என்று அழைக்கப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் சம்பங்கி மரம் ஏழுமலையானின் தலவிருட்சமாக தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

2ம் நாளாக மலைப்பாதை மூடல்

ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், திருமலையில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வழிகிறது. பாபவிநாசம், கோகர்பம் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும், மலைப்பாதையில் நேற்று முன்தினம் மண் சரிவு ஏற்பட்டது. இதனால், நிலச்சரிவு அபாயம் இருப்பதால் இரவு 7 மணிக்கே மலைப்பாதை மூடப்பட்டது. நேற்று காலை 6 மணி முதல் வாகனங்கள் வழக்கம்போல் அனுமதிக்கப்பட்டன. இந்நிலையில், 2வது நாளாக நேற்றிரவு 8 மணிக்கு மலைப்பாதை மூடப்பட்டது. இன்று அதிகாலை 4 மணிக்கு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Related Stories: