பேரிடர் காலங்களில் மின் உற்பத்தி பாதிக்காது: அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே வடசென்னை அனல்மின் நிலையத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையில், அலகு ஒன்றில் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்ததும் நேற்று மாலை தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கிருந்த அதிகாரிகளிடம், அனல் மின்நிலையத்தில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்காதது ஏன் என கண்டித்தார். அங்கு தேங்கியுள்ள நீரை அகற்றி, மீண்டும் மின் உற்பத்தி துவங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதுகுறித்து நிருபர்கள் கேட்டதற்கு, அனல் மின்நிலையத்தில் மழைக்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால், இங்கு இவ்வளவு தண்ணீர் தேங்கியிருக்காது.

ஊழியர்களின் மெத்தனப் போக்கினால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டால், தமிழகத்தில் நீர் மின் உற்பத்தி மற்றும் சூரிய ஒளி மின் உற்பத்திக்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.  இந்நிலையில், இன்று காலை மீண்டும் வடசென்னை அனல் மின் நிலையத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் ஆய்வு நடத்தினார். இதைத் தொடர்ந்து நிருபர்களிடம் பேசுகையில், இங்கு 12 மணி நேரத்தில் 210 மெகாவட் மின் உற்பத்தி துவங்கியது. மேலும், இனி வருங்காலங்களில் இதுபோன்ற பேரிடர் காலங்களில் மின் உற்பத்தி பாதிக்காது என அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதியளித்தார். இந்த ஆய்வில் மின்வாரிய துறை தலைவர் ராஜேஷ் லக்கானி, மின் உற்பத்தி இயக்குனர் எழினி, மின் பகிர்மான இயக்குனர் சிவசங்கர ராஜா, தலைமை பொறியாளர் (பொறுப்பு) மணிமேகலை, திமுக தொழிற்சங்க நிர்வாகி ராமமூர்த்தி உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories: