பெரும்பாக்கம்-ரெட்டிபாளையத்தில் தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிப்பு:வடகால் கிராமம் தனித்தீவாக மாறியதால் 500 குடும்பங்கள் தவிப்பு

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் தென்னேரி ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டால்   பெரும்பாக்கம்-ரெட்டிபாளையத்தில் தரைப்பாலம் மூழ்கியதில் போக்குவரத்து  துண்டிக்கப்பட்டு வடகால் கிராமம் தனித்தீவாக காட்சி அளித்து வருகிறது.  அப்பகுதி மக்கள் தங்களை மீட்க கோரிக்கை வைத்துள்ளனர்.

 செங்கல்பட்டு  மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.  இதனால், மாவட்டத்தின் முக்கிய ஏரிகளான கொளவாய் ஏரி, பொன்விளைந்தகளத்தூர்,  மானாம்பதி, கொண்டங்கி, தையூர், சிறுதாவூர், மதுராந்தகம், பல்லவன் குளம்  ஆகிய ஏரிகள் நிரம்பியுள்ளன. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 528 ஏரிகளில் 246  ஏரிகள் 100 சதவீதமும், 186 ஏரிகள் 80 சதவீதமும், 94 ஏரிகள் 70 சதவீதமும், 2  ஏரிகள் 50 சதவீதமும் நிரம்பியுள்ளது என நீர்வள ஆதாரத்துறையினர்  தெரிவித்துள்ளனர்.

தொடர் மழையால் செங்கல்பட்டு மாவட்டத்தில் தாழ்வான  பகுதிகளில் உள்ள மால்லபுரம், தாம்பரம், செய்யூர், வண்டலூர், மதுராந்தகம்,  திருப்போரூர் ஆகிய பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்டவர்கள் பள்ளி, கல்லூரி,  சமுதாய கூடங்களில் உள்ள நிவாரண முகாம்களில் 1300 பேர் தங்க  வைக்கப்பட்டுள்ளனர்.

 செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒன்றிய  கட்டுப்பாட்டில் 620 ஏரிகள் உள்ளன.  620  ஏரிகளில் 203 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. மற்ற ஏரிகள் வேகமாக  நிரம்பி வருவதால் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 தென்னேரி ஏரியில் இருந்து உபரிநீர் நேற்று  திறக்கப்பட்டால்  பெரும்பாக்கம்-ரெட்டிபாளையம் தரைப்பாலம் மூழ்கி  போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஆத்தூர் வடகால் ஏரியில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அந்த பகுதி தனித்தீவாக மாறி 500  குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். அவர்கள் படகு மூலம் மீட்க கோரிக்கை  வைத்துள்ளனர். பாலாற்றில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் பாலாற்றுக்கு  செல்லவேண்டாம் என மாவட்ட நிர்வாகம்  எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories: