திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது: 19ம் தேதி மகாதீபம் ஏற்றப்படும்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதையொட்டி, அண்ணாமலையார் கோயில் 3ம் பிரகாரத்தில் சுவாமி சன்னதி எதிரில் அமைந்துள்ள 63 அடி உயர தங்க கொடிமரத்தில், வேத மந்திரங்கள் ஓதி, ‘‘அண்ணாமலைக்கு அரோகரா, உண்ணாமுலையம்மனுக்கு அரோகரா’’ என்ற முழக்கத்துடன் காலை 6.45 மணியளவில் கொடியேற்றம் நடைபெற்றது.

அப்போது, அலங்கார ரூபத்தில் விநாயகர், வள்ளி- தெய்வானை சமேத சுப்பிரமணியர், உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் கொடிமரம் முன்பு எழுந்தருளி அருள்பாலித்தனர். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் தீபத்திருவிழா உற்சவத்தின் நிறைவாக, வரும் 19ம் தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயில் சுவாமி சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும். அன்று மாலை 6 மணிக்கு, 2668 அடி உயர மலைஉச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, மாட வீதியில் சுவாமி திருவீதியுலா ரத்து செய்யப்பட்டுள்ளது.

எனவே, வெள்ளித் தேரோட்டம், மகா ரதம் பவனி ஆகியவை நடைபெறாது. தீபத்திருவிழா கொடியேற்றும் நிகழ்ச்சியில், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் பா.முருகேஷ், எஸ்.பி. பவன்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பக்தர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. கோயில் ஊழியர்கள், முக்கிய பிரமுகர்கள், திருப்பணியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். கொடியேற்றம் முடிந்த பிறகு, காலை 8 மணி முதல் இ-பாஸ் மற்றும் அனுமதி அட்டை வைத்திருந்த பக்தர்கள் மட்டும், முறையான சோதனைக்கு பிறகு தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

* மகாதீபம் ஏற்றுவதற்கான புதிய கொப்பரைக்கு பூஜை

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, 2,668 அடி உயரமுள்ள மலையில் மகா தீபம் ஏற்ற தாமிரத்தால் (செப்பு) உருவான தீப கொப்பரை கடந்த 2016ல் இருந்து பயன்படுத்தப்பட்டு வந்தது. 5 ஆண்டுகள் கடந்ததால் இந்த ஆண்டு முதல் புதிய கொப்பரை பயன்படுத்தப்படுகிறது. இதற்காக கோவையைச் சேர்ந்த இரண்டு பக்தர்கள், தாமிரத்தாலான 2 தீப கொப்பரைகளை நேற்று காணிக்கையாக வழங்கினர். அந்த கொப்பரைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இந்த கொப்பரையை சுற்றிலும் இரும்பு சட்டங்கள் பொருத்தப்பட்டுள்ளன. கொப்பரையின் உயரம் ஐந்தரை அடி. எடை சுமார் 130 கிலோ. புதிய தீப கொப்பரைகளை திருச்சி பெல் நிறுவனம் உருவாக்கி உள்ளது. ஒரு கொப்பரை மகா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும். மற்றொரு கொப்பரை கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: