வன்னியர் இடஒதுக்கீடு விவகாரம்.! அரசியலமைப்பு சட்ட விதிகளின் படியே சட்டம் இயற்றப்பட்டது: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

டெல்லி: வன்னியர் இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு பண்ணையார் சமுதாய நல சங்கம் சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

வன்னியர் சமூகத்திற்கு அளிக்கப்பட்ட 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் துரைசாமி, முரளி சங்கர் அமர்வு முன்பு கடந்த 1ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுதொடர்பாக நீதிமன்றம் எழுப்பிய 6 கேள்விகளுக்கு அரசு அளித்த விளக்கம் போதுமானதாக இல்லை எனக் கூறி 10.5 சதவிகித உள் ஒதுக்கீட்டு சட்டத்தை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. இந்த நிலையில் 10.5 சதவிகித இட ஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. வன்னியர் சமூகத்துக்கான 10.5% உள் இடஒதுக்கீடு சட்டம், தமிழகத்தின் கடைபிடிக்கப்பட்டு வரும் இட ஒதுக்கீடு முறையை பாதிக்கவில்லை என்றும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தரவுகளைக் கொண்டு, அரசியலமைப்பு சட்ட விதிகளின் படியே, வன்னியர் உள் இடஒதுக்கீடுக்கான சட்டமியற்றப்பட்டது. என்றும் அதில் விளக்கப்பட்டுள்ளது. வன்னியர் சமூகத்துக்கான 10.5% உள் இடஒதுக்கீடுக்கான சட்டம் நியாயமானது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: