கேப்டனாக இல்லைன்னாலும் ஆக்ரோஷத்தை விடமாட்டேன்: விராட் கோஹ்லி உறுதி.!

துபாய்: கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும் களத்தில் ஆக்ரோஷமாக செயல்படுவதை விடமாட்டேன் என்று விராத் கோஹ்லி தெரிவித்தார். டி-20 உலகக் கோப்பைத் தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்திய அணி, நமீபியாவை நேற்று எதிர்கொண்டது. இதில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. இந்தத் தொடருடன் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராத் கோஹ்லி அறிவித்திருந்தார். அதன்படி நேற்று நடந்த போட்டியுடன் அவரது கேப்டன் பதவி முடிவுக்கு வந்தது. போட்டிக்குப் பிறகு பேசிய விராத் கோஹ்லி கூறியதாவது: இந்திய அணியின் கேப்டன் என்பது பெருமையான விஷயம். அழுத்தத்தில் இருந்து இப்போது விடுபட்டுள்ளேன். என் பணிச் சுமையை குறைக்க இதுதான் சரியான தருணம். கடந்த 6-7 வருடங்கள் தீவிரமான கிரிக்கெட் விளையாடி இருக்கிறோம். இதனால் அழுத்தம் இருந்தது. இருந்தாலும் குழுவாக சிறப்பாக செயல்பட்டோம்.

இந்த டி-20 உலகக் கோப்பையில் நாங்கள் அரையிறுதிக்கு செல்லவில்லை என்பது தெரியும். ஆனாலும் இந்த தொடரில் சில போட்டிகளில் நல்ல முடிவுகளை பெற்றிருக்கிறோம். முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்தோம். அதில் 2 ஓவர்கள் நன்றாக அடித்து ஆடியிருந்தால் முடிவு மாறியிருக்கும். அதோடு ஏற்கனவே சொன்னதை போல நாங்கள் அந்தப் போட்டிகளில் துணிச்சலாக ஆடவில்லை. டாஸ்தான் காரணம் என்று சொல்லி தப்பிப்பவர்கள் அல்ல நாங்கள். பயிற்சியாளர்கள், உதவி பணியாளர்கள் ஆகியோருக்கு நன்றி. அவர்கள் எங்களுடன் இணைந்து மகத்தான பணியை செய்திருக்கிறார்கள். நான் வெளிப்படுத்தும் ஆக்ரோஷம் பற்றி கேட்கிறார்கள். கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும் அது மாறப்போவதில்லை. ஆக்ரோஷமாக இல்லை என்றால் என்னால் விளையாட முடியாது. இனியும் களத்தில் அதை தொடர்வேன். அணிக்காக ஏதாவது ஒரு வகையில் என் பங்களிப்பை அளிப்பதே லட்சியம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: