பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் 6வது முறையாக ஜோகோவிச் சாம்பியன்

பாரிஸ்: பிரான்சில் நடந்த பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் 6 முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் நடப்பு சாம்பியன் டானியல் மெட்வதேவுடன் (25 வயது, 2வது ரேங்க்) மோதிய ஜோகோவிச் (34வயது) 4-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் 2 மணி, 15 நிமிடம் போராடி வென்று பாரிஸ் மாஸ்டர்ஸ்  பட்டத்தை 6வது முறையாக கைப்பற்றினார். ஏற்கனவே 2009, 2013, 2014, 2015, 2019ல் அவர் இங்கு பட்டம் வென்றிருந்தார். சமீபத்தில் நடந்த  யுஎஸ் ஓபன் பைனலில் தன்னை தோற்கடித்த மெட்வதேவுக்கு நேற்றைய ஆட்டத்தின் மூலம் பதிலடி கொடுத்தார்.

மேலும், ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 அந்தஸ்து தொடர்களில் இது ஜோகோவிச் வெல்லும் 37வது பட்டமாகும். இந்த வரிசையில் ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் (36 பட்டம்) 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார். அடுத்ததாக, இத்தாலியின் டுரின் நகரில் வரும் 14ம் தேதி தொடங்கும் நிட்டோ ஏடிபி பைனல்ஸ் தொடரில் ஜோகோவிச் களமிறங்குகிறார். இந்த தொடரில் பங்கேற்க தகுதி பெற்றுள்ள, சீசன் முடிவு தரவரிசையில் டாப் 8 இடங்களைப் பிடித்த வீரர்கள்: 1. ஜோகோவிச், 2. மெட்வதேவ் (நடப்பு சாம்பியன்), 3. அலெக்சாண்டர் ஸ்வெரவ் (ஜெர்மனி), 4. ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் (கிரீஸ்), 5. ஆந்த்ரே ருப்லேவ் (ரஷ்யா), 6. மேட்டியோ பெரட்டினி, 7. ஹூபர்ட் ஹர்காக்ஸ் (போலந்து), கேஸ்பர் ரூட் (நார்வே).

Related Stories: