நமீபியாவுக்கு எதிராக ரிஸ்வான், பாபர், ஹபீஸ் அதிரடி

அபுதாபி: நமீபியா அணியுடனான சூப்பர் 12 சுற்று லீக் ஆட்டத்தில் (2வது பிரிவு), பாகிஸ்தான் அணி அதிரடியாக விளையாடி 2 விக்கெட் இழப்புக்கு 189 ரன் குவித்தது. ஷேக் சையத் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. முகமது ரிஸ்வான், கேப்டன் பாபர் ஆஸம் இருவரும் பாகிஸ்தான் இன்னிங்சை தொடங்கினர். நமீபியா பவுலர்கள் துல்லியமாகப் பந்துவீசி நெருக்கடி கொடுக்க, சற்று அடக்கி வாசித்த பாக். தொடக்க ஜோடி முதல் 10 ஓவரில் 59 ரன் மட்டுமே சேர்த்தது. குறிப்பாக, ரிஸ்வான் மிக நிதானமாக விளையாடி கட்டை போட்டார்.

பாபர் 39 பந்தில் அரை சதம் அடித்தார். பாபர் - ரிஸ்வான் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 14.1 ஓவரில் 113 ரன் சேர்த்தனர். பாபர் 70 ரன் (49 பந்து, 7 பவுண்டரி) விளாசி வீஸ் பந்துவீச்சில் வெளியேறினார். அடுத்து வந்த பகார் ஸமான் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, ரிஸ்வானுடன் முகமது ஹபீஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் நமீபியா பந்துவீச்சை பதம் பார்க்க, ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. ஜேஜே ஸ்மிட் வீசிய கடைசி ஓவரில் 4 பவுண்டரி, 1 சிக்சர் உள்பட 24 ரன் விளாசி மிரட்டினார். பாகிஸ்தான் 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 189 ரன் குவித்தது. ரிஸ்வான் 79 ரன் (50 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்), ஹபீஸ் 32 ரன்னுடன் (16 பந்து, 5 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 190 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நமீபியா களமிறங்கியது.

Related Stories: