அத்தியாவசிய பணிகள் மிகவும் முக்கியம்!: புதிய நாடாளுமன்ற கட்டட பணிகளுக்கு தடை விதிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு..!!

டெல்லி: புதிய நாடாளுமன்றத்தை உள்ளடக்கிய சென்ட்ரல் விஸ்டா கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. கொரோனா 2வது அலையில் நாடு சிக்கி தவிக்கும் நெருக்கடியான சூழலிலும் டெல்லியில் சென்ட்ரல் விஸ்டா திட்ட பணிகளை மத்திய அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். புதிய நாடாளுமன்ற கட்டட பணிகளுக்கு தடை விதிக்க வலியுறுத்தி டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றும் தொடரப்பட்டது. ஆயிரக்கணக்கான கட்டட தொழிலாளர்களுக்கு நோய் தொற்று பரவ வாய்ப்பிருப்பதால் கட்டட பணிக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் முறையிடப்பட்டிருந்தது. இந்த மனுவை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என்.பட்டேல், நீதிபதி ஜோதிசிங் அமர்வு விசாரித்து வந்தது. 
இருதரப்பு வாதங்களும் கடந்த மே மாதம் 17ம் தேதி நிறைவுபெற்றதை அடுத்து வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய டெல்லி உயர்நீதிமன்றம், சென்ட்ரல் விஸ்டா கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. சென்ட்ரல் விஸ்டா கட்டட பணி, ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அத்தியாவசிய பணி என்பதால் அதற்கு தடை விதிக்க முடியாது என்று கூறி மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. உள்நோக்கத்துடன் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறிய நீதிபதிகள், மனுதாரர்கள் அன்யா மல்கோத்ரா, சோஹில் ஹஸ்மி ஆகியோருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.  

The post அத்தியாவசிய பணிகள் மிகவும் முக்கியம்!: புதிய நாடாளுமன்ற கட்டட பணிகளுக்கு தடை விதிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: