அதிகரித்து வரும் வெப்பநிலை தீ தடுப்பு, வெப்பஅலை தயார் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்: மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்

புதுடெல்லி: வெப்பநிலை அதிகரிப்பால் தீ தடுப்பு மற்றும் வெப்பஅலை தயார்நிலை குறித்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடன் ஒன்றிய சுகாதார அமைச்சகம் ஆலோசனை நடத்தியது. நாடு முழுவதும் வெயிலின் கோரத்தாண்டவத்தால் வெப்பநிலை அதிகரித்து கொண்டே உள்ளது. இந்நிலையில் நாடு முழுவதுமுள்ள மருத்துவமனைகளில் தீ தடுப்பு மற்றும் மின் பாதுகாப்பு தயார் நிலைகள் குறித்து ஒன்றிய சுகாதார அமைச்சகம் நேற்று ஆலோசனை நடத்தியது.

ஒன்றிய சுகாதார அமைச்சக மருத்துவ சேவைகள் தலைமை இயக்குநர் டாக்டர் அதுல் கோயல் மற்றும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, வெப்பம் தொடர்பான நோய்களுக்கான சுகாதார அமைப்புகளின் தயார் நிலையை வலுப்படுத்த அரசின் வழிகாட்டுதல்களை செயல்படுத்த வலியுறுத்தப்பட்டது.

கடுமையான வெப்பம் தொடர்பான நோய்களுக்கு அவசரகால குளிரூட்டல் குறித்த வழிகாட்டுதல்கள், வெப்பம் தொடர்பான இறப்புகளில் பிரேத பரிசோதனை முடிவுகள் குறித்த வழிகாட்டுதல்கள் நாடு முழுவதுமுள்ள அனைத்து எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் கல்லுரிகளுக்கு வழங்கப்பட்டு, அவற்றை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டது. மேலும் இந்திய வானிலை ஆய்வு மையம் வௌியிட்ட வெப்ப அலை குறித்த எச்சரிக்கைகளை பரப்புவது, வெப்பத்தால் தீ விபத்துகள் ஏற்பட்டால் நோயாளிகள், பணியாளர்கள், பார்வையாளர்கள் வௌியேற அவசரகால பதிலளிப்பு திட்டங்களை நிறுவுவது குறித்து அனைவருக்கும் ஆலோசனைகளும், வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன.

The post அதிகரித்து வரும் வெப்பநிலை தீ தடுப்பு, வெப்பஅலை தயார் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்: மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: