பாஜ எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகை கங்கனா ரனாவத் கன்னத்தில் பெண் காவலர் பளார்: சண்டிகர் விமான நிலையத்தில் பரபரப்பு

சண்டிகர்: பாஜ வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள நடிகை கங்கனா ரனாவத்தை விமான நிலையத்தில் பெண் காவலர் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இமாச்சலப்பிரதேசம், மண்டி தொகுதியில் பாஜ வேட்பாளராக நடிகை கங்கனா ரனாவத் போட்டியிட்டார். காங்கிரஸ் வேட்பாளரை காட்டிலும் 74000 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் நேற்று அவர் டெல்லி செல்வதற்காக சண்டிகர் விமான நிலையத்துக்கு வந்தார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த துணை ராணுவத்தை சேர்ந்த சிஐஎஸ்எப் பெண் காவலருக்கும் நடிகை கங்கனாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த பெண் காவலர் கங்கனாவின் கன்னத்தில் அறைந்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக கங்கனா தரப்பில் புகார் கொடுக்கப்பட்டதை அடுத்து சம்பந்தப்பட்ட சிஐஎஸ்எப் பெண் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து கங்கனாவின் உதவியாளர் கூறுகையில், ‘‘விவசாயிகளின் போராட்டத்தின்போது கங்கனா கூறியிருந்த கருத்துக்களால் அதிருப்தி அடைந்திருந்ததால் பெண் காவலர் கங்கனாவை கன்னத்தில் அறைந்துள்ளார்” என்றார். இதற்கிடையே கங்கனாவை அறைந்த பெண் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரிடம் சிஐஎஸ்எப் உயர அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

* நலமாக இருக்கிறேன்
நடிகை கங்கனா பஞ்சாபில் தீவிராதம் மற்றும் வன்முறை அதிகரிப்பால் அதிர்ச்சி என்ற தலைப்பில் வீடியோ அறிக்கையை தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டுள்ளார்,‘‘நான் பாதுகாப்பாகவும், நலமாகவும் இருக்கிறேன். ஆனால் பஞ்சாபில் அதிகரித்து வரும் தீவிரவாதத்தை குறித்து கவலைப்படுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post பாஜ எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகை கங்கனா ரனாவத் கன்னத்தில் பெண் காவலர் பளார்: சண்டிகர் விமான நிலையத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: