உயர் பிரிவினருக்கான 10% இடஒதுக்கீடு வழக்கு முடியும் வரை மருத்துவ முதுகலை படிப்பு நீட் கலந்தாய்வு நிறுத்தம்: ஒன்றிய அரசு தகவல்

புதுடெல்லி: பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் பிரிவினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரையில், இந்த ஆண்டின் முதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் கலந்தாய்வு துவங்கப்படாது என ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது. பெருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு மருத்துவப் மேற்படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் 10 சதவீதம் வழங்கியதை அமல்படுத்துவது தொடர்பாக தேசிய தேர்வுகள் முகமை கடந்த ஜூலை 30ம் தேதி அறிவிப்பானை வெளியிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10சதவீத இடஒதுக்கீடு, மற்றும் ரூ.8 லட்சம் வருமான அளவுகோல் ஆகியவை எதன் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டது என கேள்வி எழுப்பியதோடு, அது குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி கடந்த 21ம் தேதி ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து,சின்கா கமிட்டி உத்தரவின் அடிப்படையில் தான் இவை நிர்ணயம் செய்யப்பட்டது என ஒன்றிய அரசு நேற்று முன்தினம் அறிக்கை தாக்கல் செய்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா, ‘இந்த வழக்கில் நீதிமன்றம் இறுதி உத்தரவை பிறப்பிக்கும் வரையில், இந்தாண்டு மருத்துவ முதுகலை படிப்புக்கான நீட் கலந்தாய்வை அரசு நடத்தாமல் நிறுத்தி வைக்கும். அதனால், வழக்கு விசாரணையை வேறு தேதிக்கு மாற்றியமைக்க வேண்டும்,’ என தெரிவித்தார். இதையடுத்து, வழக்கு நவம்பர் 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories:

More
>