டெலிவரி ஊழியர் கொலை வழக்கு கொடுக்கல் வாங்கல் தகராறில் தீர்த்துக் கட்டினோம்: பாசக்கார நண்பர்கள் பரபரப்பு வாக்குமூலம்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே வெங்கல் அடுத்த சிவன்வாயில் பகுதியில், கடந்த 17ம் தேதி தலையில் வெட்டு காயங்களுடன் வாலிபர் சடலம் கிடந்தது. இதுதொடர்பாக, வெங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், சிவன்வாயில் கரையான்மேடு கிராமத்தை சேர்ந்த ஜெகதீசன் (26). திருவள்ளூர் பூங்கா நகரில் சிக்கன் கடை நடத்தினார். பகுதி நேரமாக திருவள்ளூர் பிலிப்காட் கம்பெனியில் டெலிவரி வேலை செய்து வந்தார் என தெரிந்தது. தொடர்ந்து, ஜெகதீசனை தலையில் வெட்டி கொலை குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்தனர்.

அப்போது, ஜெகதீசனின் செல்போன் நம்பரில் இருந்து, அவரது நண்பர் சிவன்வாயில் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு அதிக முறை பேசியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், மணிகண்டன் (25), வதட்டூர் கிராமத்தை சேர்ந்த வினோத்குமார் (25) ஆகியோரை, நேற்று முன்தினம் இரவு பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து தீவிரமாக விசாரித்தனர். அதில், மணிகண்டனும் ஜெகதீசனும் திருவள்ளூரில் கூட்டாக சிக்கன் கடை நடத்தி வந்தனர். அதில் அவர்களுக்குள் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னை இருந்தது. இதனால் முன்விரோதம் ஏற்பட்டது. அதேபோல் வினோத்குமாருடன், வயல்வெளியில் புறா பிடிப்பது சம்பந்தமாக ஜெகதீசனுடன் தகராறு ஏற்பட்டது. அதனால் அவருடனும் முன் விரோதம் உருவானது. இதையடுத்து, ஜெகதீசனை தீர்த்து கட்ட 2 பேரும் திட்டம் தீட்டினர்.

இந்நிலையில், சம்பவதன்று மணிகண்டன், ஜெகதீசனை சிக்கன் வியாபாரத்தை முடித்து விட்டு பைக்கிள் அழைத்து கொண்டு சிவன்வாயில் கோயில் அருகில் வந்தார். அப்போது நைசாக பேசி ஜெகதீசனை மது அருந்த செய்தார். அவருக்கு போதை தலைகேறியதும், அங்கு மறைந்திருந்த வினோத்குமார், மறைத்து வைத்திருந்த கத்தியால் தலையில் சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் ஜெகதீசன் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரை அப்படியே விட்டு விட்டு அங்கிருந்து தப்பி விட்டனர் என 2 பேரும் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். பின்னர், நேற்று அவர்களை திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: