சிறப்பு பறக்கும் படை அமைக்ககோரி வழக்கு நாட்டின் வளர்ச்சியை ஊழல் சீர்குலைக்கிறது: தலைமை நீதிபதி அமர்வு கருத்து

மதுரை: நாட்டின் வளர்ச்சி மற்றும் பொருளாதாரத்தை ஊழல் சீர்குலைப்பதாக தலைமை நீதிபதி அமர்வு கருத்து தெரிவித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: அரசு ஊழியர்கள் சொத்துகள் வாங்கும்போது, தங்களது மூத்த அதிகாரிகளிடம் முறையாக தகவல் தெரிவிக்க வேண்டும். வீடு கட்டுவது, விரிவாக்கம் செய்வது போன்ற பணிகளுக்கு கூட முறையான தகவலும், அனுமதியும் தேவை. அரசு பொது ஊழியர்கள் தங்களின் கடமையை செய்ய யாரிடமும் பணமோ, பொருளோ கேட்டு நிர்பந்திக்கக்கூடாது. ஆனால் அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே பணி முடியும் என்ற நிலை உள்ளது.

பெரும்பாலான உயர் அதிகாரிகள் ஊழலில் ஈடுபடும் கீழ் நிலையிலுள்ள ஊழியர்களை பாதுகாத்திடும் வகையிலேயே பணியாற்றுகின்றனர். இதனால் அரசு ஊழியர்களும், அதிகாரிகளும் எவ்வித அச்சமுமின்றி தொடர்ச்சியாக ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். அரசியல்வாதிகளின் துணையுடன் பலர் தப்பிக்கும் நிலையும் உள்ளது. கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே ஊழலை கட்டுப்படுத்த முடியும். எனவே, அரசு துறைகளில் நடைபெறும் ஊழல் மற்றும் சட்டவிரோத செயல்களை கண்காணிக்க மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் சிறப்பு பறக்கும் படை குழுவை அமைக்குமாறும், லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு அனுப்பும் புகார்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறைக்கோ, அலுவலருக்கோ அனுப்பப்படக்கூடாது எனவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி எம்.துரைச்சுவாமி ஆகியோர், ‘‘ஊழல் என்பது நாட்டின் பொருளாதாரத்தையும், வளர்ச்சியையும் சீர்குலைக்கிறது. இந்த விவகாரம் ஆழமானது. சாதாரண மனிதர்களிடமும் குறுக்கு வழியை ஊக்குவிக்கும் நிலை உள்ளது’’ என்றனர். பின்னர், இந்த மனுவிற்கு ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் தரப்பில் 4 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். பின்னர் மனு மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் பட்டியலிடுமாறு உத்தரவிட்டு, விசாரணையை 6 வாரம் தள்ளி வைத்தனர்.

Related Stories:

More
>