விமானத்தில் தூக்கி செல்லும் வசதி சென்னையில் 100 படுக்கை மொபைல் மருத்துவமனை: ஒன்றிய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு

புதுடெல்லி: பிரதமரின் ஆயுஷ்மான் சுகாதார உள்கட்டமைப்பு திட்டம் குறித்து, டெல்லியில் மாண்டவியா நேற்று அளித்த பேட்டி: பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் உள்கட்டமைப்பு திட்டம் ரூ.64,000 கோடி முதலீட்டில் நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது. இது மிகப் பெரிய தற்சார்பு இந்தியாவுக்கான திட்டமாகும். இதன் மூலம், ஊரக மற்றும் நகர்ப்புற சுகாதார உள்கட்டமைப்புகளில் உள்ள இடைவெளி நிரப்பப்படும். 10 மாநிலங்களில் உள்ள 17,788 ஊரக சுகாதார மற்றும் நல மையங்களுக்கு உதவிகள் அளிக்கப்படும். மேலும், 11,024 நகர்புற சுகாதார மற்றும் நல மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

இத்திட்டத்தின் கீழ், மாவட்ட அளவில் 134 வகையான மருத்துவ பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படும். மாவட்டங்களில் ரூ. 90 முதல் ரூ. 100 கோடி செலவில் சுகாதார உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட உள்ளன. தேசிய, மாவட்ட அளவில் சிறந்த ஆய்வகங்கள் உருவாக்கப்படும். திட்டமிடப்பட்டுள்ள 1.5 லட்சம் மையங்களில் இதுவரை 79,415 சுகாதார மற்றும் நல மையங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. சென்னை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில், அவசர காலத் தேவையின் போது விமானம் அல்லது ரயில் மூலம் எளிதில் எடுத்து செல்லக் கூடிய, 100 படுக்கைகள் கொண்ட கன்டெய்னரில் வடிவமைக்கப்பட்ட நகரும் மருத்துவமனைகள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

ஏஒய்.4.2 குறித்து ஆய்வு

* இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் ஆகியவை புதிய ஏஒய்.4.2 உருமாறிய கொரோனா வைரஸ் குறித்து ஆராய்ந்து வருகின்றன.

* குழந்தைகளுக்கான ஜைகோவ்-டி கொரோனா தடுப்பூசியின் விலை நிர்ணயம் பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. - அமைச்சர் மன்சுக் மாண்டவியா

Related Stories: