25 கோடி பேரம் பேசிய விவகாரம்: விஜிலென்ஸ் விசாரணைக்கு உத்தரவு

மும்பை: போதைப்பொருள் விவகாரத்தில் ஆர்யன் கானை விடுவிக்க 25 கோடி பேரம் பேசப்பட்ட விவகாரம் குறித்து விஜிலென்ஸ் விசாரணை நடத்த, போதைப்பொருள் தடுப்பு பிரிவு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனிடையே, இந்த விவரங்களை வெளியிட்ட சாட்சிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக, மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் திலீப் வல்சே பாட்டீல் கூறியுள்ளார்.  சொகுசு கப்பலில் போதை விருந்து தொடர்பாக கைது செய்யப்பட்ட நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை விடுவிக்க ₹25 கோடி லஞ்சம் கேட்டு பேரம் பேசப்பட்டதாக, இந்த வழக்கின் முக்கிய சாட்சிகளில் ஒருவரான பிரபாகர் செயில், சமூக வலைதளங்களில் வெளியிட்ட பிரமாண பத்திரம் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில், தன்மீது பொய் புகார்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக்கூடாது என மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு இயக்குநர் சமீர் வான்கடே, மும்பை மாநகர போலீஸ் கமிஷனருக்கு நேற்று முன்தினமே கடிதம் எழுதியிருந்தார்.

இதற்கிடையில், சமீர் வான்கடே போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக அமைச்சர் நவாப் மாலிக் குற்றம் சாட்டியுள்ளார். இதனை வான்கடே மறுத்துள்ளார். இருப்பினும், இந்த விவகாரம் குறித்து விஜிலென்ஸ் விசாரணை நடத்த, மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விசாரணையை, போதைப்பொருள் தடுப்பு பிரிவின் வடக்கு மண்டல துணை இயக்குநர் ஜெனரல் ஞானேஸ்வர் சிங் நடத்துவார் என போதைப்பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. விஜிலென்ஸ் விசாரணை, வான்கடேயிடம் மட்டுமின்றி, பிரபாகர் செயலிடமும் நடத்தப்படும் என கூறியுள்ளது. இருப்பினும், வான்கடே ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி என போதைப்பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கிடையே, 25 கோடி பேரம் விவரத்தை வெளியிட்ட பிரபாகர் செயிலுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக, மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் திலீப் வல்சே பாட்டீல் கூறினார். இந்த வழக்கின் மற்றொரு சாட்சியும், தனியார் துப்பறிவாளருமான கே.பி.கோசாவி தலைமறைவாக உள்ளார். அவரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக, புனே போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>