மழைக்காலத்தில் முல்லைப்பெரியாறு அணையில் எவ்வளவு கனஅடி தண்ணீர் சேமித்து வைக்க முடியும்?: ஒன்றிய நீர்வளத்துறைக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணையில் மழைக்காலத்தின் போது எவ்வளவு கன அடி தண்ணீரை சேமித்து வைக்க முடியும் என ஒன்றிய நீர்வளத்துறைக்கு உச்ச நீதிமன்றம் நேற்று கேள்வியெழுப்பி உள்ளது. முல்லைப் பெரியாறு அணையால் மக்களுக்கு எந்த பாதிப்பும் வராமல் நடவடிக்கை எடுக்கும் விதமாக துணைக்குழு மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை குழு ஆகியவை ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என கடந்த 2018ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து நடத்தப்பட்ட கூட்டத்தில் இயற்கை பேரிடர் திட்டத்தை செயல்படுத்தும் விதமாக துணைக் குழுவுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு துணைக்குழுவை கலைக்க கோரியும், அணை பாதுகாப்பு மற்றும் இயக்கமுறைகள் சரியாக இல்லை என ஜாய் ஜோசப் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அது குறித்து  பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய ஒன்றிய அரசுக்கு கடந்த 9ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருக்கிறது. பராமரிப்பு பணிகளும் முடிவடைந்து விட்டது என ஒன்றிய அரசு கடந்த 18ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த மனுதாரர், ‘முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் ஒன்றிய அரசின் நிலை அறிக்கை தொழில்நுட்ப ரீதியாக தவறாக உள்ளது என்றும், இதனால் அணையின் கீழ் பகுதியில் வசிக்கும் மக்கள் உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து வரலாம் என பதில் மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ஏ.எம்.கன்வீல்கர் தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் உமாபதி வாதத்தில், ‘‘முல்லைப் பெரியாறு அணையில் தற்போது 137 கனஅடி தண்ணீர் உள்ளது. இதில் கேரள மாநிலத்தில் மழை பெய்து வந்தாலும் அங்கிருந்து வரும் நீர் அனைத்தும் பாதுகாப்பு கருதி உபரியாக தான் வெளியேற்றப்படுகிறது. இதில் அடுத்த சில நாட்களுக்கு மழை கிடையாது என்பதால், அணைக்கு எந்தவித பாதுகாப்பு பிரச்சனையும் கிடையாது என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், ‘கேரளாவில் தற்போது மழை அதிகமாக இருப்பதால் முல்லைப் பெரியாறு அணைக்கு பாதிப்பு உள்ளது. அதனை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும்’ என தெரிவித்தார்.

இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘ முல்லைப் பெரியாறு அணையில் மழைக்காலத்தில் எவ்வளவு கன அடி நீரை சேமித்து வைக்க முடியும்? என்பது குறித்து ஒன்றிய நீர்வளத்துறை பதிலளிக்க வேண்டும். அதேபோல் இந்த விவகாரத்தில் அணையின் மேற்பார்வை குழுவும் நாளை மறுநாள்  அனைத்து விவரங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’ எனக்கூறி ஒத்திவைத்தனர்.

ஆபத்து இல்லை: பினராய் விஜயன்

முதல்வர் பினராய் விஜயன் சட்டபேரவையில் பேசுகையில், ‘முல்லைபெரியாறு அணைக்கு தற்போதைக்கு எந்த ஆபத்தும் கிடையாது. அணை குறித்து சமூக ஊடகங்கள் மூலம் பீதியை உருவாக்கும் நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு தெளிவான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. புதிய அணை கட்ட வேண்டும் என்பது தான் கேரள அரசின் எண்ணம். ஆனால் இந்த நிலைப்பாட்டை ஒன்றிய அரசு ஆதரிக்கவில்லை. தமிழக அரசும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனாலும் புதிய அணை என்ற நிலைப்பாட்டில் இருந்து கேரளம் பின்வாங்காது. முல்லை பெரியாறு விவகாரத்தில் தமிழகம், கேரளம் இடையே சில கருத்து வேறுபாடு இருந்தாலும் தமிழகம் தொடர்ந்து கேரளாவுக்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. எனவே முல்லை பெரியாறு பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காண்போம் என்று கூறினார்.

Related Stories: