வடகிழக்கு பருவமழை தீவிரம்; கொட்டகுடி ஆற்றில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்: விவசாயிகள் ‘குஷி’

போடி: தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கடந்த இரண்டு வாரத்திற்கு மேலாக தொடர் மழை பெய்து வருகிறது. போடி அருகே மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள அகமலை, அத்தியூத்து, உரல் மெத்து,  வடக்கு மலை, குரங்கணி, கொட்டகுடி கொழுக்குமலை, முட்டங் கள், போடிமெட்டு போன்ற பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் மழையால் ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இந்த நீர்வரத்து காட்டாறு வெள்ளம் சாம்பலாறு மெகா தடுப்பணையை நிறைத்து மறுகால் பாய்ந்து கொட்டகுடி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.

போடி முத்தல் சாலையிலுள்ள கொட்டகுடி ஆற்றில் உள்ள மூக்கறைப் பிள்ளையார் தடுப்பணையில் தற்போது வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதனால் போடியை சுற்றி இருக்கின்ற பங்காரு சாமி, சங்கரப்பநாயக்கன், மீனாட்சியம்மன், சிறுகுளம் போன்ற கண்மாய்களும், குளங்களும் நிறைந்து வருகிறது. இதனால், இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

விவசாயிகள் கூறுகையில், ‘‘மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால், தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏரி, குளம், ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், இப்பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்கு போதுமான தண்ணீர் கிடைக்கும். அதனால், பயிரிடும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு விவசாயம் செழிக்கும், என்றனர்.

Related Stories: