நகைக்கடை உரிமையாளருக்கு சொந்தமான சொகுசு கார், அரை கிலோ தங்கம் ரூ.5 லட்சத்துடன் டிரைவர் ஓட்டம்: போலீசார் விசாரணை

சென்னை: புதுக்கோட்டையில் இருந்து சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த நகைக்கடை உரிமையாளரின் கார், ரூ.5 லட்சம் மற்றும் அரை கிலோ தங்கத்துடன் மாயமான டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினத்தை சேர்ந்தவர் அகமது இப்ராகிம் (44). இவர், அம்மாபட்டினத்தில் சுமங்கலி ஜூவல்லரி என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கவுசியா பேகம். கடந்த 21 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்த தம்பதிக்கு, இதுவரை குழந்தை இல்லை. இதனால், சென்னை சேத்துப்பட்டில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக அடிக்கடி வந்து சென்றுள்ளனர்.

அதன்படி, நேற்று முன்தினம் தொழிலதிபர், மனைவியுடன் சேத்துப்பட்டில் உள்ள மருத்துவமனைக்கு காரில் வந்தார். காரை உறவுக்காரர் முகமது பாரூக் ஓட்டி வந்துள்ளார். சிகிச்சை முடிந்ததும், வீட்டிற்கு புறப்பட டிரைவருக்கு போன் செய்தபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அந்த காரில் ரூ.5 லட்சம், அரை கிலோ தங்கம் வைத்திருந்தார். இதுபற்றி சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் இப்ராகிம் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

இதனிடையே மாயமான கார் டிரைவர், தனது மனைவியிடம் செல்போனில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது, உறவினரிடமே இதுபோன்று நடந்துகொண்டது தவறு என மனைவி கண்டித்துள்ளார். அதற்கு அவர், தஞ்சாவூர் பேருந்து நிலையம் அருகே காரை நிறுத்தி உள்ளேன். வந்து எடுத்துக்கொள்ள சொல், என கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இதுபற்றி டிரைவரின் மனைவி, உறவினர் இப்ராகிமிடம் தெரிவித்துள்ளார். அதன்பேரில், தஞ்சாவூர் போலீசார் உதவியுடன் காரை போலீசார் மீட்டனர். அதில், பணம், நகை மாயமானது தெரிந்தது. மாயமான டிரைவரின் செல்போன் சிக்னலை வைத்து, அவரை தேடி வருகின்றனர்.

Related Stories: