திருப்பத்தூர் பகுதியில் சோதனை கெட்டுப்போன 50 கிலோ மாட்டிறைச்சி, 30 கிலோ குட்கா பறிமுதல்-உணவு பாதுகாப்பு அதிகாரி அதிரடி

திருப்பத்தூர் : திருப்பத்தூர் பகுதியில் உணவு பாதுகாப்பு அதிகாரியின் அதிரடி சோதனையில் கெட்டுப்போன 50 கிலோ மாட்டிறைச்சி, 30 கிலோ குட்கா பறிமுதல் ெசய்யப்பட்டது.

திருப்பத்தூர் பகுதியில் கெட்டுப்போன மாட்டிறைச்சி, கோழி இறைச்சிகள் விற்பனை செய்யப்படுவதாக கலெக்டர் அமர்குஷ்வாஹாவுக்கு தொடர் புகார்கள் வந்தது. இதையடுத்து ஒருங்கிணைந்த மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தில்குமார் உத்தரவின்பேரில், திருப்பத்தூர் உணவு பாதுகாப்பு அலுவலர் பழனிசாமி நேற்று திருப்பத்தூர் பகுதியில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது சின்னக்கடை தெருவில் உள்ள மாட்டிறைச்சி கடையில், கெட்டுப்போன இறைச்சியை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் 50 கிலோ மாட்டிறைச்சியை பறிமுதல் செய்து அழித்தனர். தொடர்ந்து திருப்பத்தூர் பகுதிகளில் உள்ள பல்வேறு கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது காலாவதியான குளிர்பானங்கள் மற்றும் தடை செய்யப்பட்ட 30 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர்.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் பழனிசாமி கூறியதாவது:ஆடு, மாடு, கோழி இறைச்சிகளை 6 மணி நேரத்திற்குள் விற்பனை செய்துவிட வேண்டும். அதனை குளிர்சாதன பெட்டியில் பதப்படுத்தி விற்பனை செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.  மேலும், நாள்பட்ட இறைச்சியை உட்கொள்வதால், பொதுமக்களுக்கு பல்வேறு விதமான நோய் பரவி வயிறு உபாதைகள் உள்ளிட்டவை ஏற்படும். மேலும் இறைச்சி விஷமாக மாறி உயிரிழப்புகளும் ஏற்படும். ஆகையால் வியாபாரிகள் ஒரு நாளுக்கு மேற்பட்ட இறைச்சிகளை விற்பனை செய்துவிட்டு, மீதமுள்ள இறைச்சிகளை குப்பையில் வீசி விட வேண்டும்.இதை தவிர்த்து காலாவதியான இறைச்சிகளை விற்பனை செய்யப்படும் கடைகளுக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கடலை எண்ணெயில் கலப்படம்

திருப்பத்தூர் பகுதியிலுள்ள உள்ள மரச்செக்கு எண்ணெய் தயாரிக்கும் பகுதியில் உணவு பாதுகாப்பு அலுவலர் பழனிசாமி நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு உள்ள கடலை எண்ணெயில், பாமாயில் கலந்து விற்பனை செய்வதாகவும் தகவல் வெளியானதைத் தொடர்ந்து ஆய்வு செய்தார். பின்னர், அதன் மாதிரிகளை எடுத்து சென்னை ஆய்வுக்கு அனுப்பி வைத்தார். அதன் முடிவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: