சேலம் பியூட்டி பார்லர் அழகி கொலை வழக்கு: தலைமறைவான மும்பை பெண்ணின் காதலனை பிடித்து தீவிர விசாரணை

சேலம்: சேலம் பியூட்டி பார்லர் அழகி  கொலை வழக்கில், தலைமறைவான மும்பை பெண்ணின் காதலனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் தேஜ்மண்டல் (26). சேலத்தில் 3 இடங்களில் பியூட்டி பார்லர் மற்றும் ஸ்பா என்னும் மசாஜ் சென்டர் நடத்தி வந்தார். சேலம் வின்சென்ட் பகுதியில் உள்ள அதிமுக பிரமுகர் நடேசன் என்பவரின் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த தேஜ்மண்டல், கொலை செய்யப்பட்டு சூட்கேஸில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.

இதுபற்றி அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகளை அமைத்துள்ளனர். தனிப்படை விசாரணையில் தேஜ்மண்டல், தனது மசாஜ் சென்டரில் பணியாற்றிய 4 பேரை ஒரு வீட்டில் தங்க வைத்திருந்தார். கடைசியாக சூட்கேஸ் வைக்கப்பட்டிருந்த வீட்டில் இருந்து  ஒரு ஆண், ஒரு பெண் என இருவர் வெளியே வந்து கதவை பூட்டுவதும், அந்த ஆண், சிசிடிவி கேமராவை தள்ளி விடுவதும் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

இதனை வைத்து பார்க்கும்போது, அவர்கள் தான் இக்கொலையில் ஈடுபட்டுள்ளனர் என்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர். அவர்களை பற்றி விசாரித்த போது, வங்கதேசத்தை சேர்ந்த லப்லு, இளம்பெண் நிசி, மும்பையை சேர்ந்த இளம்பெண் ரிஷி, பெங்களூரை சேர்ந்த ஷீலா எனத்தெரியவந்தது. இந்த 4 பேரும் தலைமறைவாகி விட்டனர்.  சேலத்தில் தேஜ்மண்டலை கொலை செய்துவிட்டு, பெங்களூருக்கு தப்பிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதனிடையே, கொலையான தேஜ்மண்டலின் காதலன் ஆத்தூர் நரசிங்கபுரத்தை சேர்ந்த பிரதாப்பை பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர், பிரதாப்பை அழைத்துக் கொண்டு தனிப்படை போலீசார் பெங்களூரு சென்றனர். அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது, முக்கிய குற்றவாளியாக கருதப்படும் லப்லு, நிசி ஆகிய இருவரும் வங்கதேசத்திற்கும், ரிஷி மும்பைக்கும் தப்பிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, தலைமறைவாக உள்ள மும்பையை சேர்ந்த ரிஷியின் காதலன் வினய்யை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  தலைமறைவாக உள்ளவர்களை பிடிக்க வங்கதேசம் மற்றும் மும்பைக்கு தனிப்படை போலீசார் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

Related Stories:

More
>