அரபாத் ஏரியில் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்களால் துர்நாற்றம்: அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்

ஆவடி: அரபாத் ஏரியில் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்களால் துர்நாற்றம் வீசிகிறது. இதனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தினர்.  திருமுல்லைவாயலில் சி.டி.எச் சாலையை ஒட்டி சுமார் 65 ஏக்கர் பரப்பளவில் அரபாத் ஏரி உள்ளது. ஏரியை சுற்றி மணிகண்டபுரம், சரவணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு அரபாத் ஏரி, குடிநீராகவும் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கியது. நாளடைவில் இந்த ஏரியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறையாக பராமரிக்கவில்லை. இதனால் அங்கு குப்பை கழிவுகள் கலந்து அரபாத் ஏரி நீரை குடிநீராக பயன்படுத்த முடியவில்லை. மேலும், ஏரியை சுற்றியுள்ள வீடுகளில் இருந்து கழிவுநீர் குழாய்கள் மூலம் விடப்படுகிறது. இதனால், அந்த நீர் மாசடைந்து காணப்படுகிறது.

மேலும், இதன் காரணமாக, அப்பகுதியை சுற்றியுள்ள நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக அரபாத் ஏரியில் ஆங்காங்கே டன் கணக்கில் மீன்கள் செத்து மிதக்கின்றன. இவைகள் அழுகி கடும் துர்நாற்றம் வீசிகிறது. இதனால் சி.டி.எச் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும், ஏரியை சுற்றி குடியிருப்பவர்களும் சுகாதார சீர்கேட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள் அரபாத் ஏரியில் செத்து மிதக்கும் மீன்களை உடனடியாக அகற்றி சுகாதார சீர்கேட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

ஆக்சிஜன் தட்டுப்பாடு

மீன்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், `ஆவடி பகுதியில் கடந்த சில நாள்களாக மழை விட்டு விட்டு பெய்கிறது. ஏரியின் தட்ப வெப்பநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு உள்ள மீன்களுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு மீன்கள் செத்து மிதக்கின்றன,’ என்றனர்.

கழிவுநீர் கலப்பு

சமூக ஆர்வலர்கள் கூறுகையில், `அரபாத் ஏரியில் நாளுக்கு நாள் கழிவுநீர் அதிக அளவில் விடப்படுகிறது. இதன் காரணமாக, ஏரி நீர் மாசடைந்து வருகிறது. மேலும், ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தடுக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Related Stories: