வால்பாறையில் சிக்கிய புலிகுட்டிக்கு வேட்டை பயிற்சி அளிக்க திட்டம்

வால்பாறை: வால்பாறையில் உடல் நலம் தேறி வரும் குட்டி புலிக்கு வேட்டை பயிற்சி அளிக்க  தமிழக தலைமை வன உயிரினக் காப்பாளர் சேகர் குமார் நீரஜ் உத்தரவிட்டுள்ள நிலையில், பிரம்மாண்ட கூண்டு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள முடீஸ் எஸ்டேட் பஜார் பகுதியில் 2 வயதான  ஆண் புலி உடல் மெலிந்த நிலையில் உலா வந்தது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில்  வனத்துறையினர் கடந்த 28ம் தேதி புதரில் மறைந்திருந்த புலியை கண்காணித்து, வலைவிரித்து பிடித்தனர். பின்னர், அதனை வால்பாறையை அடுத்த ரொட்டிக்கடை எஸ்டேட்டில் உள்ள வனத்துறை மனித - வனவிலங்கு மோதல் தடுப்பு பிரிவு முகாமிற்கு கொண்டு சென்று கூண்டில் அடைத்து வைத்து மருத்துவ சிகிச்சை அளித்து வந்தனர்.

புலியின் உடலில் இருந்து முள்ளம் பன்றியின் முட்கள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், புலியின் எச்சத்திலும் முட்கள் காணப்படுவதால், முள்ளம்பன்றி வேட்டையின் போது,  காயம் அடைந்து, சாப்பிடமுடியாமல் புலி அவதிப்பட்டு வருவதை அறிந்து அதற்குரிய சிகிச்சை மேற்கொண்டதின் அடிப்படையில் தற் zபோது புலியின் உடல் நிலை சீரடைந்து வருகிறது. இந்நிலையில், ரொட்டிக்கடை முகாமில் பார்வையாளர்கள் அதிகரித்த நிலையில், புலி வனத்துறை கட்டுப்பாட்டில் மானாம்பள்ளி பீட்டில் உள்ள அடர் வனப்பகுதி அமைக்கப்பட்டுள்ள வனத்துறை முகாமில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிறப்பு குழு அமைத்து புலியின் உடல் நிலை 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், நேற்று தமிழக தலைமை வன உயிரினக் காப்பாளர் சேகர் குமார் நீரஜ் கூண்டில் அடைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் புலியை நேரில் பார்வையிட்டார். பல நாட்களாக கூண்டுக்குள் அடைக்கப்பட்டுள்ள புலிக்கு, இயற்கையான கூண்டு அமைத்து, அதன் வேட்டைத்திறனை மேம்படுத்த தேசிய புலிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி கூண்டு அமைக்க அதிகாரிகள் வனச்சரகர் மணிகண்டனுக்கு உத்தரவிட்டனர்.

இந்நிலையில், புலியின் வேட்டைத்திறன் மேம்பாடு அடைய பெரிய கூண்டு அமைக்கப்பட்டு, நடைபயிற்சி, வேட்டை பயிற்சி அளித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேட்டை திறன் மேம்பட்டால் மட்டுமே புலியை அடர் வனத்திற்குள் விடுவது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

Related Stories:

More
>