தொடர் விடுமுறையால் ஊட்டியில் லாட்ஜ், காட்டேஜ்களில் அறைகள் இல்லை

ஊட்டி : ஆயுத பூஜை மற்றும் பள்ளி வார விடுமுறை என தொடர் விடுமுறையால் ஊட்டியில் உள்ள அனைத்து லாட்ஜ் மற்றும் காட்டேஜ்களும் புக்கிங் ஆகிவிட்டன.  தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை விடுமுறை வந்தாலே சுற்றுலா பயணிகள் ஊட்டியை முற்றுகையிட துவங்கியுள்ளனர். குறிப்பாக, பண்டிகை விடுமுறைகள் மற்றும் வார விடுமுறைகள் என தொடர் விடுமுறை வந்தால், அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

இதுதவிர, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஊட்டியை முற்றுகையிடுவது வழக்கம். இந்நிலையில், ஆயுதபூஜை விடுமுறை மற்றும் வார விடுமுறை ஆகியவை என நான்கு நாட்கள் விடுமுறை வந்த நிலையில், சுற்றுலா பயணிகள் ஊட்டியை முற்றுகையிட துவங்கியுள்ளனர்.

இன்று முதல் 17ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு விடுமுறை என்பதால் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், கர்நாடக மாநிலத்தில் தசரா விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆன்லைன் மூலம் புக்கிங் செய்து வருகின்றனர்.

இதனால், இன்று முதல் வரும் 2ம் தேதி வரை ஊட்டியில் மட்டுமின்றி, நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து லாட்ஜ் மற்றும் காட்டேஜ்களும் புக்கிங் ஆகிவிட்டன. அனைத்து லாட்ஜ் மற்றும் காட்டேஜ்களிலும் அறைகள் இல்லை என்ற போர்டு வைக்கத் துவங்கியுள்ளனர்.  மேலும், லாட்ஜ்களில் இரண்டாம் சீசனுக்கான கட்டணங்கள் (இருவர் தங்கும் படுக்கை அறை) குறைந்தபட்சம் ரூ.2 ஆயிரத்தில் இருந்து கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.

அதுவே காட்டேஜ்களில் ரூ.3 ஆயிரத்திற்கு மேல் வசூலிக்கப்படுகிறது. பெரும்பாலான காட்டேஜ்கள் புக்கிங் ஆன நிலையில், நாளை அறைகளின் கட்டணம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.  அதே சமயம், சுற்றுலா பயணிகள் வாகனங்களால் ஊட்டியில் இந்த வார இறுதியில் வாகன நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

அதேபோல், அனைத்து சுற்றுலா தலங்களும் சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் மிகவும் குறைந்து காணப்பட்டது. இதனால், சுற்றுலா தொழிலை நம்பி தொழில் செய்து வருபவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.

 ஆனால், கடந்த இரு மாதங்களாக ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. தற்போது நான்கு நாட்கள் விடுமுறை என்பதால், மேலும் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஊட்டியில் உள்ள வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Related Stories: