பதிலுக்கு பதில் நடவடிக்கை முடிவுக்கு வந்தது இங்கிலாந்து பயணிகளுக்கு இனிமேல் தனிமை இல்லை: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் இருந்து வரும் பயணிகளில் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற புதிய பயணக் கட்டுப்பாட்டை இங்கிலாந்து அரசு இம்மாத தொடக்கத்தில் அறிவித்தது. இதனால், இங்கிலாந்தில் படிக்கும் மாணவர்கள், வேலை பார்ப்பவர்கள் அங்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த ஒன்றிய அரசு, கட்டுப்பாடுகளை நீக்காவிட்டால், இதே போன்ற விதிமுறைகளை இந்தியாவும் அமல்படுத்தும் என்று எச்சரித்தது. இதையடுத்து, இருதரப்பில் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, கோவிஷீல்டு தடுப்பூசியை அங்கீகரித்த இங்கிலாந்து அரசு, தனிமைப்படுத்தும் கட்டுப்பாட்டை தளர்த்தவில்லை.

இதைத் தொடர்ந்து, இங்கிலாந்தில் இருந்து இந்தியா வரும் பயணிகள் 2 டோஸ் தடுப்பூசி போட்டிருந்தாலும் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்ற புதிய பயணக் கட்டுப்பாட்டை ஒன்றிய அரசு அமல்படுத்தியது. பின்னர், இரு நாடுகளின் பிரதமர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது தடுப்பூசி விவகாரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து, இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கான தனிமைப்படுத்துதல் கட்டுப்பாட்டை இங்கிலாந்து திரும்ப பெற்றது. அதேபோல், இங்கிலாந்தில் இருந்து வருபவர்களுக்கான தனிமைப்படுத்தும் பயண வழிகாட்டுதல் கட்டுப்பாடுகளை திரும்ப பெறுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

புதிய பாதிப்பு 15,823

* நேற்று ஒரே நாளில் புதிதாக 15,823 பேருக்கு தொற்று பாதித்துள்ளதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,40,01,743 ஆக உள்ளது.

* வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து 19வது நாளாக 30,000க்கும் குறைவாக உள்ளது.

* கடந்த 24 மணி நேரத்தில் 226 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 4,51,189 ஆக அதிகரித்துள்ளது.

* நாடு முழுவதும் இதுவரை 96.43 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது.

Related Stories: