2 முதல் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தலாம்: ஒன்றிய நிபுணர் குழு பரிந்துரை

புதுடெல்லி: நாடு முழுவதும் 2 முதல் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தலாம் என ஒன்றிய நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. இதைத் தொடர்ந்து, இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கும் பட்சத்தில், குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும். இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16ம் தேதி தொடங்கியது. தற்போது 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 96 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சுமார் 30 கோடி பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, அக்டோபர் இறுதியில் கொரோனா 3வது அலை தாக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் ஏற்கனவே எச்சரித்துள்ளனர். அதோடு, பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு வருகின்றன. இதனால் விரைவில் குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடுவதற்கான பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. செப்டம்பரில் குழந்தைகளுக்கான தடுப்பூசி அமலுக்கு வரும் என ஒன்றிய அரசு ஏற்கனவே கூறி உள்ளது. இந்நிலையில், கோவாக்சின் தடுப்பூசியை 2 முதல் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு செலுத்தலாம் என ஒன்றிய அரசின் நிபுணர் குழு நேற்று பரிந்துரை செய்துள்ளது.

ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோ டெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதை 2 முதல் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொடுத்து பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. இதன் இரண்டு கட்ட பரிசோதனை முடிவுகள் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் ஒன்றிய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையத்திடம் வழங்கப்பட்டது. இதை ஆய்வு செய்த நிபுணர் குழு கோவாக்சின் தடுப்பூசியை குழந்தைகளுக்கும் செலுத்தலாம் என அவசரகால பயன்பாட்டிற்கு பரிந்துரை செய்துள்ளது.

இதற்கு, இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் (டிசிஜிஐ) அனுமதி வழங்கும் பட்சத்தில், குழந்தைகளுக்கும் கோவாக்சின் தடுப்பூசி பயன்பாட்டில் கொண்டு வரப்படும். இந்த தடுப்பூசி சுமார் 1000 குழந்தைகளிடம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே  உள்நாட்டைச் சேர்ந்த சைடிஸ் கேடில்லா நிறுவனத்தின் ஜைகோவ்-டி தடுப்பூசிக்கு ஒன்றிய அரசு அவசரகால பயன்பாட்டு அனுமதி வழங்கி உள்ளது. இந்த தடுப்பூசியை 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தலாம். ஆனாலும் இந்த தடுப்பூசி இதுவரை செயல்பாட்டில் வரவில்லை.

தற்போது, கோவாக்சினுக்கு அனுமதி தரப்பட்டால் இந்தியாவில் குழந்தைகளுக்கு செலுத்த அனுமதிக்கப்பட்ட 2வது தடுப்பூசியாக இருக்கும். ஏற்கனவே கோவாக்சின் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருவதால், அனுமதி கிடைத்ததும் குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி உடனடியாக தொடங்கப்படும் என தெரிகிறது. கோவிஷீல்டு தடுப்பூசியை உற்பத்தி செய்யும் சீரம் நிறுவனம், அமெரிக்காவின் நோவாவாக்ஸ் எனும் குழந்தைகளுக்கான தடுப்பூசியை பரிசோதனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

14,313 பேருக்கு தொற்று

* நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 14,313 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது கடந்த 224 நாட்களில் இல்லாத அளவுக்கு குறைவான எண்ணிக்கையாகும். மொத்த பாதிப்பு 3 கோடியே 39 லட்சத்து 85 ஆயிரத்து 920 ஆகும்.

* இதே போல கடந்த 24 மணி நேரத்தில் 181 பேர் பலியாகி உள்ளனர். மொத்த கொரோனா பலி 4 லட்சத்து 50 ஆயிரத்து 963 ஆக உள்ளது.

* தற்போது 2 லட்சத்து 14 ஆயிரத்து 900 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: