தமிழகத்தில் மின்தடை இருக்காது: அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

திருச்சி: தமிழகத்தை பொறுத்தவரை மின்தடை இருக்காது. சோலார் மின்சாரத்தை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் விரைவில் போடப்படும் என்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார். திருச்சியில் அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்றிரவு அளித்த பேட்டி: தமிழகத்தில் சீரான மின் விநியோகம் அளிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனல் மின் நிலையத்துக்கு நாளொன்றுக்கு 56,000 டன் நிலக்கரி தேவைப்படுகிறது.

தினசரி 60,000 டன் அளவுக்கு வருகிறது. அனல் மின் நிலையங்களில் கடந்த ஆட்சியில் நாள் ஒன்றுக்கு 1,800 மெகாவாட் தான் உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது அனல் மின் நிலையங்களின் உற்பத்தி 70 விழுக்காடு உயர்ந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை தற்போது வரை சீரான மின் விநியோகம் செய்வதற்கான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு தினசரி 16 ஆயிரம் மெகாவாட் வேண்டும். 2,500 மொகா வாட் பற்றாக்குறை உள்ளது.

இதை சரி செய்ய மாவட்டந்தோறும் சூரிய ஒளி மின் உற்பத்தி பூங்காவை அமைக்கும் திட்டத்தை முதல்வர் வழங்கியுள்ளார். தமிழகத்தில் ஒரு நொடிகூட மின் வெட்டு இருக்கக்கூடாது என முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தை பொறுத்தவரை மின்தடை இருக்காது. சீரான மின் விநியோகம் இருக்கும். சோலார் மின்சாரத்தை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் விரைவில் போடப்படும். 1,500 மெகாவாட் அளவுக்கு வெளியில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குறைந்த விலையில் மின்சாரம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒரே ஆண்டில் 216 துணை மின் நிலையங்கள் அமைக்க பணிகள் நடந்து வருகிறது. பருவமழையை எதிர்கொள்ள 1 லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: