ஏழுமலையான் கோயிலில் பிரமோற்சவம் தங்க கருட சேவையில் ஆந்திர முதல்வர் பங்கேற்பு-பாதுகாப்பு வாகன ஒத்திகை நடந்தது

திருமலை :  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவத்தின் 5வது நாளான கருடசேவை இன்று இரவு நடைபெற உள்ளது. இந்த கருட சேவையில் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் பட்டு வஸ்திரங்களை சமர்ப்பிக்க உள்ளார். இதற்காக இன்று திருப்பதி வரும் முதல்வர் ஜெகன் மோகன் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைக்க உள்ளார்.

அதில்  முதல்வரின் கனவு திட்டமான குழந்தைகளுக்கான இருதய மருத்துவமனை தொடங்கி வைக்க உள்ளார்.

ஆந்திர மாநிலப் பிரிவினைக்குப் பிறகு குழந்தைகளுக்கான இருதய மருத்துவமனை இல்லாததால் சித்தூர், நெல்லூர், கடப்பா, பிரகாசம் உள்ளிட்ட ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சைக்காக சென்னை, பெங்களூரு அல்லது ஐதராபாத் சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே  திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் மருத்துவமனை கட்ட வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதன்படி திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் முடிவு செய்யப்பட்டு திருப்பதி மருத்துவமனையில் உள்ள பர்டு மருத்துவ மனையின் பழைய கட்டிடத்தை புதுப்பித்து ₹25 கோடி மதிப்பில் குழந்தைகளுக்கான இருதய மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

இதனை முதல்வர் ஜெகன் மோகன் இன்று தொடங்கி வைக்க உள்ளார். இங்கு நாளை காலை முதல் குழந்தைகளுக்கான இருதய சிகிச்சைக்கு, புற நோயாளிகள் சிகிச்சை தொடங்கி உள்ளது. ஒரு மாதத்தில் அறுவை சிகிச்சையும் மேற்கொள்ள தேவஸ்தான அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதேபோன்று அலிபிரியில் இருந்து திருமலைக்கு 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மலைப்பாதையில் ஆங்காங்கே சிதலமடைந்து இருந்த நிலையில் அதனை புதுப்பிக்க ₹25 கோடியில் தனியார் நிறுவனத்தின் நன்கொடை மூலம் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

புனரமைக்கப்பட்ட அலிபிரி நடைபாதையை முதல்வர் ஜெகன்மோகன் தொடங்கி வைக்க உள்ளார்.

நாளை காலை முதல் பக்தர்கள் அலிபிரியில் இருந்து திருமலைக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இதேபோன்று திருமலை திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினரும் சென்னையில் உள்ள தேவஸ்தான கோயில் எல்.ஏ.சி. தலைவர் ஏ.ஜெ.சேகர்  நன்கொடையின் மூலம் ₹15 கோடியில் கட்டப்பட்டுள்ள கோமந்திரத்தை திறந்து வைக்க உள்ளார்.  இதில் சப்த கோபுர பிரதட்சண சாலை, கோ மந்திரம், கோ துலாபாரம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. இதனை விசாக சாரதா பீடாதிபதி சொரூபானந்த சுவாமி, மந்திராலயம் பீடாதிபதி சுபதேந்திர தீர்த்த சுவாமியுடன் இணைந்து திறந்துவைக்க உள்ளார். இதனை தொடர்ந்து திருமலைக்கு சென்று பேடி ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில் இருந்து பட்டு வஸ்திரங்களை தலையில் சுமந்தபடி எழுமலையானுக்கு சமர்ப்பிக்கவுள்ளார்.

பின்னர் கருட சேவையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து 2022ம் ஆண்டுக்கான தேவஸ்தானத்தின் டைரி, காலண்டர்  வெளியிட்டு திருமலையில் தங்க உள்ளார். பின்னர் நாளை காலை இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாக இயக்குனரும், தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினருமான னிவாசன் நன்கொடையில் ₹12 கோடியில் கட்டப்பட்டுள்ள வெப்பம் இல்லாத வகையில் அமைக்கப்பட்டுள்ள பூந்தி தயாரிக்கும் மையத்தை திறந்து வைக்க உள்ளார்.

இதனை தொடர்ந்து வெங்கடேஸ்வரா பக்தி தொலைக்காட்சியின் மூலம் கன்னடம் மற்றும் இந்தியில் புதிய தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பை தொடங்கி வைக்கிறார். முதல்வர் வருகையையொட்டி திருப்பதி- திருமலை இடையே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories: