100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் சத்தி, தாளவாடி, பவானிசாகர் ஒன்றிய அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம்

சத்தியமங்கலம் :  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூறு நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் சத்தியமங்கலம், பவானிசாகர் மற்றும் தாளவாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கிராம ஊராட்சிகளில் நூறு நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இத்திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பல வாரங்களாக ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், திருப்பூர், கோவை உள்ளிட்ட அருகில் உள்ள மாவட்டங்களில் நூறு நாள் வேலை திட்டத்தில் வழங்கப்படும் கூலியை விட சத்தி, பவானிசாகர் தாளவாடி ஒன்றியங்களில் குறைந்த கூலி வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதேபோல், எஸ்சி, எஸ்டி இதர பிரிவினர் என மூன்று வகையாக பிரித்து ஊதியம் வழங்கும் வகையில் ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்தி மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று பவானிசாகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 800க்கும் மேற்பட்ட நூறு நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் இந்திய கம்யூ., தெற்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன், வடக்கு ஒன்றிய செயலாளர் வேலுமணி, உத்தண்டியூர் ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடி ஆகியோர் தலைமையில் பவானிசாகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த போராட்டத்தில் 800க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சத்தி தெற்கு ஒன்றிய செயலாளர் நடராஜ், வடக்கு ஒன்றிய செயலாளர் சுரேந்தர், கடம்பூர் மலை வட்டார செயலாளர் ராமசாமி, நகர செயலாளர் ஸ்டாலின் சிவகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இதேபோல், தாளவாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு  முற்றுகை போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட நூறு நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர். ஒன்றிய செயலாளர் மோகன், ஒன்றிய கவுன்சிலர் அருள்சாமி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

சத்தியமங்கலம் மற்றும் பவானிசாகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற முற்றுகைப் போராட்டங்களில் இந்திய கம்யூ., முன்னாள் எம்எல்ஏ சுந்தரம் கலந்துகொண்டு தொழிலாளர்களின் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். இதைத்தொடர்ந்து, முன்னாள் எம்எல்ஏ சுந்தரம் தலைமையில் சத்தியமங்கலம், பவானிசாகர்  ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Related Stories: