*500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்பு
சத்தியமங்கலம் : சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், சதுமுகை ஊராட்சியில் கடந்த ஒரு மாத காலமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை வழங்கப்படாததால் மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஒன்றிய செயலாளர் சுரேந்தர் தலைமையில் நூறுநாள் வேலை வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர், ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை புஜியா பாபு கிராமின் ரோஜ்கர் யோஜனா என மாற்றும் திருத்த சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கியதை எதிர்த்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஒன்றிய அரசு இந்த திட்டத்தினை சிதைக்கும் போக்கை கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
3 மணி நேரம் நடைபெற்ற காத்திருப்பு போராட்டம், அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பின்பு கைவிடப்பட்டது. போராட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முருகன், தொழிற்சங்க தலைவர்கள் ஸ்டாலின் சிவக்குமார், சரவணன் மற்றும் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
