திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது: பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி தாயார்களுடன் எழுந்தருளினார்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும், வருடாந்திர பிரமோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. 9 நாட்கள் நடக்கும் பிரமோற்சவத்தில் நேற்று முதல் ஏழுமலையான்  கோயிலில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக கோயிலில் சம்பங்கி பிரகாரத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அருள் பாலிக்க உள்ளார். பிரமோற்சவத்திற்கு முக்கோடி தேவதைகளை வரவேற்கும் விதமாக மாலை 5.10 மணி முதல் 5.30 மணிக்கு இடையே மிதுன லக்னத்தில் அர்ச்சகர்களின் வேத மந்திரங்கள் முழங்க தலைமை அர்ச்சகர் வேணுகோபால தீட்சிதர் தலைமையில் தங்க கொடிமரத்தில் கருடர் உருவம் வரையப்பட்ட மஞ்சள் நிற கொடி ஏற்றப்பட்டது. இதில் ஸ்ரீதேவி பூதேவி சமேதரராக மலையப்ப சுவாமி  எழுந்தருளினார்.

பிரமோற்சவத்தின் முதல் நாளான நேற்று இரவு பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி கல்யாண மண்டபத்தில்  எழுந்தருளி அருள்பாலித்தனர். சீனிவாச பெருமாள் குடியிருக்கும் மலையும், அவர் சயனித்து இருப்பதும் சேஷத்தின் (ஆதிசேஷன்) மீது என்பதால் பிரமோற்சவத்தின் முதல் நாளில் ஏழு தலைகளுடன் கூடிய பெரிய சேஷவாகனத்தில் சுவாமி எழுந்தருளி அருள் பாலித்தார். இன்று காலை சின்ன சேஷ வாகனத்தில்  வாசுகி என்னும் பாம்பின் மீது அமர்ந்த படியும், இன்றிரவு அன்ன வாகனத்தில் மலையப்ப சுவாமி அருள் பாலிக்க உள்ளார். கொரோனா 3வது அலையை கருத்தில் கொண்டு 2வது ஆண்டாக பிரமோற்சவ விழா பக்தர்கள் இல்லாமல் கோயிலுக்குள் நடத்தப்படுகிறது.

ஆன்லைனில் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட், இலவச தரிசன டிக்கெட் மற்றும் கல்யாண உற்சவ சேவை ஆன்லைனில் பங்கேற்க டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டும் திருமலைக்கு அனுமதிக்கப்படுகின்றனர். அவ்வாறு அனுமதிக்கப்படும் பக்தர்களும் மூலவரை மட்டும் தரிசனம் செய்வதற்கு மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். பிரமோற்சவ விழாவை தேவஸ்தான தொலைக்காட்சி மட்டுமல்லாமல் அனைத்து தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பி பக்தர்கள் காணும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: