லக்கிம்பூரில் நடந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஒருநபர் ஆணையம் அமைப்பு.: விசாரணையை முடித்து 2 மாதத்தில் அறிக்கை தர உ.பி. அரசு உத்தரவு

உ.பி.: லக்கிம்பூரில் நடந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஒருநபர் ஆணையம் அமைத்து உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் அருகே உள்ள ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் கிராமத்தில்  அக்.3-ல் நிகழ்ச்சி நடைபெற இருந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு செல்லும் பா.ஜ.க தலைவர்களுக்கு எதிராக கருப்பு கொடி காட்டி விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். அந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைக்க முயன்றனர். ஆனால் போராட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகள் கலைந்து செல்ல மறுத்ததால், அங்கு காரில் வந்த ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் விவசாயிகள் கூட்டத்தில் காரை மோத செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் 4 விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பின்னர் விவசாயிகளுக்கும், பாஜகவினருக்கும் பெரும் மோதல் வெடித்தது. இந்த வன்முறையில் பாஜகவினர் 4 பேர், ஒரு பத்திரிக்கையாளர் உள்பட மொத்த 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனைத்தொடர்ந்து அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல தரப்பினர் இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டமும் நடத்தி வருகின்றனர்.  இந்தநிலையில், தற்போது அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி பிரதீப்குமார் ஸ்ரீவஸ்தவா தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்து உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

விசாரணையை முடித்து 2 மாதத்தில் அறிக்கை தரவும் ஒருநபர் ஆணையத்துக்கு உத்தரபிரதேச அரசு ஆணையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: